'தர்க்கம் செய்யாதீர்': விவசாயிகளை கடிந்த கலெக்டர்; மனுவுக்கு 236 நாளாக தீர்வில்லை: விவசாயிகள் அதிருப்தி  

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், முறைகேடு குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்ட விவசாயிகளிடம், தர்க்கம் செய்யாதீர்கள் என கோபத்துடன் கலெக்டர் பேசினார். மனு அளித்து 236 நாட்களாக தீர்வு எட்டவில்லை என விவசாயிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.


சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார்.


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, மாவட்ட வன அலுவலர் பிரபா, வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஷ்வரி, பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்



சந்திரன் (இந்திய கம்யூ.,) சிவகங்கை: கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (பாம்கோ)யில் கொரோனா காலத்தில் நடந்த ரூ.58 லட்சம் முறைகேடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கலெக்டர்: விவசாயிகள் குறைகளை மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து தர்க்கம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


விஸ்வநாதன் (இந்திய கம்யூ.,) சிவகங்கை: மாவட்டத்தில் அதிகளவில் கண்மாய்கள் உள்ளன. கோடை காலத்தில் இக்கண்மாய்களை துார்வாரி, மழை காலங்களில் அதிக நீர் சேகரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கலெக்டர்: மாவட்ட அளவில் 5,600 கண்மாய்கள் உள்ளன. இவை அனைத்தையும் துார்வார அரசிடம் நிதி பெற முடியாது. பொதுப்பணி, ஊரக வளர்ச்சி துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி துார்வாரப்படும். விவசாய தேவைக்கு 400 கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதித்துள்ளது.


கோபால், பொன்னாங்கால்: பயிர்களை அழிக்கும் காட்டு பன்றிகளை ஒழிக்குமாறு ஒரு ஆண்டாக போராடி வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


பிரபா, மாவட்ட வன அலுவலர், சிவகங்கை: இங்கு வளர்வது காட்டு பன்றியா, நாட்டு பன்றியா என ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அந்த அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கலெக்டர்: வனத்துறையிடமிருந்து அறிக்கை வந்ததும், காட்டு பன்றியாக இருந்தால், வனத்துறையினர் சுட்டு பிடிப்பார்கள். நாட்டு பன்றிகளாக இருந்தால் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


சந்திரன், (இந்திய கம்யூ.,), சிவகங்கை: காரைக்குடி அருகே கோவிலுார் கெமிக்கல் ஆலையில் இருந்து வரும் கழிவு நீர் காரைக்குடிக்கு நீர் ஆதாரமாக உள்ள சம்பை ஊற்றில் கலப்பதால், பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


கலெக்டர்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சம்பை ஊற்றில், கெமிக்கல் ஆலை கழிவுநீர் கலக்கவில்லை என தெரிவிக்கின்றனர். இது குறித்து இன்னும் விசாரிக்கப்படும்.


விஸ்வநாதன், சிவகங்கை: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்கவும், நெல் குவிண்டாலுக்கு ஆதார விலை ரூ.3,000, கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ராமலிங்கம், தமறாக்கி: படமாத்துார் சக்தி சர்க்கரை ஆலையில் டிச., முதல் தற்போது வரை 93 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்துள்ளனர். கரும்புக்கான ஆதார விலையை வழங்க வேண்டும்.


வெள்ளைமுத்து, மானாமதுரை: கிருங்காக்கோட்டை கண்மாய் வரத்து கால்வாயில், செங்கல் சேம்பர் கழிவு கற்களை கொட்டி கண்மாய்க்கு நீர்வரத்தின்றி தடுத்துள்ளனர். அதை அகற்ற வேண்டும்.

அய்யாச்சாமி (தி.மு.க.,) மேலநெட்டூர்: வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் போவதை தடுக்கவும், ஆற்றை துார்வார சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பல முறை 5 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை.

கலெக்டர்: வைகை ஆற்றை துார்வாரி, ஆக்கிரமிப்பு அகற்ற நிதி வேண்டும். அரசு நிதி ஒதுக்கியதும், வைகை ஆற்றை துார்வாரி, ஆழப்படுத்தப்படும். இது குறித்த அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம்.

முத்துக்கிருஷ்ணன், தேவகோட்டை: பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு, 90 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அரசு அறிவிக்கிறது. ஆனால், நான் மனு அளித்து 236 நாட்களாகியும் தீர்வு எட்டப்படவில்லை.

ஆபிரகாம், கல்லுவெளி: காளையார்கோவில் பகுதியில் திரியும் குரங்குகள், தென்னை மரங்களில் ஏறி காய்களை சேதப்படுத்துகின்றன. இதனால் அக்குரங்குகளை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் (கூட்ட அரங்கில் கலெக்டர் உட்பட அனைவரும் 'சிரிப்பலை'யில் மூழ்கினர்) விடப்போகிறேன்.

பிரபா, மாவட்ட வன அலுவலர், சிவகங்கை: மாவட்ட அளவில் குரங்குகளை பிடிக்க கோரி 700 க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. எங்களிடம் இரண்டு ரேஞ்சர் தலைமையிலான ஊழியர்கள் தான் உள்ளனர்.

சேங்கைமாறன் (தி.மு.க.,), திருப்புவனம்: பழையனுாரில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அல்லது ஏ.டி.எம்., அமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement