போலீசாரின் செயல் ரொம்ப மோசம்; மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: 'திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தலையிட்ட பிறகும், மாதர் சங்க மாவட்ட தலைவர் பாப்பாத்தியை விடுவிக்க மறுத்து போலீசார் தகராறு செய்தது மிக மோசமான செயலாகும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும், போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும், கல்வி நிலையங்களில் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்ற அமர்வை நடத்த வேண்டும், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சென்னையில் நேற்று பேரணி நடத்தியது.
மாதர் சங்கம் நடத்திய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
போலீசாரின் அனுமதியுடன் நடைபெற்ற பேரணிக்கு மாநிலம் முழுவதிலும் இருந்தும் பெண்கள் சென்னைக்கு வந்தனர். அந்த முறையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாப்பாத்தி சென்னை பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்ட போது, எவ்வித வழக்கோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் அவரை திண்டுக்கல் மாவட்டபோலீசார் வீட்டு காவலில் வைத்தது வன்மையான கண்டனத்திற்குரியது.
எம்.பி., சச்சிதானந்தம் தலையிட்ட பிறகும், பாப்பாத்தியை விடுவிக்க மறுத்து போலீசார் தகராறு செய்தது மிக மோசமான செயலாகும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.










மேலும்
-
கடலுாரில் பா.ஜ., கட்சியினர் மறியல்!
-
பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்
-
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் பயணி கைது
-
கோவை அருகே ரூ.1 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: வாகன சோதனையில் போலீசார் அதிரடி
-
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்: உதவி கிடைக்கவில்லை என வேதனை
-
சமூகத்தில் நிலவும் வன்முறைக்கு சினிமா காரணமா: சுரேஷ் கோபி சொல்வது இதுதான்!