மணிப்பூரில் மார்ச் 8 முதல் இயல்பான வாகன போக்குவரத்து: உறுதி செய்ய அமித் ஷா உத்தரவு

1

புதுடில்லி:"மார்ச் 8 முதல் மணிப்பூர் சாலைகளில் இயல்பான போக்குவரத்தை உறுதி செய்யுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, இன்று புது டில்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், மணிப்பூர் அரசாங்க அதிகாரிகள், உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மார்ச் 8 முதல் மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்களுக்கான இயல்பான போக்குவரத்தை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தடைகளை உருவாக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு அமித் ஷா தலைமையில் நடைபெறும் முதல் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் இதுவாகும்.

மணிப்பூரில் என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பிப்ரவரி 13 அன்று அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மாநில சட்டமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா மேலும் பேசியதாவது:


"தடைகளை உருவாக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். "மணிப்பூரில் நீடித்த அமைதியை மீட்டெடுப்பதற்கும், இந்த விஷயத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் மத்திய அரசு முழுமையாக உறுதி ஏற்றுள்ளது,

எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, மணிப்பூரின் சர்வதேச எல்லையில் உள்ள நியமிக்கப்பட்ட நுழைவுப் புள்ளிகளின் இருபுறமும் வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.

மணிப்பூரை போதைப்பொருள் இல்லாததாக மாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement