பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை: ம.பி.,யில் சோகம்

போபால்: ம.பி.,யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அம்மாநிலத்தில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ்சிற்குள் வைத்து இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், ம.பி., மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவரை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக தாக்கினான். இதில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் 28 தையல் போடப்பட்டது. அச்சிறுமி தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பேரையும் தூக்கில் போட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், ம.பி., மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
முதல் சம்பவம்
ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் சகோதரர் உறவுமுறை கொண்ட நபரே சிறுமியை வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பிஎன்எஸ்( பலாத்காரம்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது சம்பவம்
அதே போல் கடந்த பிப்.,21 அன்று சிதி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 11வது படிக்கும் அந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது, அச்சிறுமி எழுதிய கடிதம் மூலம் தெரியவந்தது. இதனால், அச்சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. டாக்டர்கள் முயற்சி செய்தும் அச்சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது சம்பவம்
ஷிவ்புரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் நகரில் தங்கி படித்து வருகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இரண்டு பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் விரக்தியடைந்த அந்தச் சிறுமி சொந்த கிராமத்திற்கு சென்று நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான காயங்கள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த வாரமும் சிறுமி தற்கொலைக்கு முயன்றதாகவும், மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில், மீண்டும் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.








