அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா: துசென், கிளாசன் விளாசல்

கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. நேற்றைய லீக் போட்டியில் கிளாசன், துசென் அரைசதம் விளாச, 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஏமாற்றம் அளித்தது.


பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. கராச்சியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. தென் ஆப்ரிக்க அணியில் பவுமா, டோனி டி ஜார்ஜிக்கு பதிலாக கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெற்றனர். ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து அணியில் மார்க் உட் (காயம்) நீக்கப்பட்டு, சாகிப் மெஹ்மூது வாய்ப்பு பெற்றார். கேப்டனாக கடைசி போட்டியில் களமிறங்கிய ஜோஸ் பட்லர், 'டாஸ்' வென்று 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
யான்சென் மிரட்டல்: இங்கிலாந்தின் 'டாப்-ஆர்டரை' தகர்த்தார் மார்கோ யான்சென். இவரது 'வேகத்தில்' பில் சால்ட் (8), ஜேமி ஸ்மித் (0) வெளியேறினர். டக்கெட்டும் (24) யான்செனிடம் 'சரண்டர்' ஆக, இங்கிலாந்து 7 ஓவரில் 38/3 ரன் என தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஹாரி புரூக் 62 ரன் சேர்த்தனர். இந்த சமயத்தில் மஹாராஜ் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது பந்தை புரூக் (19) துாக்கி அடித்தார். எல்லையில் யான்சென் கலக்கலாக பிடிக்க, பரிதாபமாக அவுட்டானார். முல்டர் பந்தில் ரூட் (37) போல்டானார். லிவிங்ஸ்டன் (10), ஆர்ச்சர் (25) நிலைக்கவில்லை.


கலக்கல் 'பீல்டிங்': நிகிடி 'வேகத்தில்' பட்லர் (21) நடையை கட்டினார். தாழ்வாக வந்த பந்துகளை கூட 'கேட்ச்' பிடிப்பது, எல்லையில் துடிப்பாக தடுப்பது என தென் ஆப்ரிக்க அணியினர் பீல்டிங்கில் அசத்தியதால், ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, இத்தொடரில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
தென் ஆப்ரிக்கா சார்பில் யான்சென், முல்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


சூப்பர் வெற்றிசுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்டப்ஸ் (0) ஏமாற்றினார். ஆர்ச்சர் 'வேகத்தில்' ரிக்கிள்டன் (27) போல்டனார். பின் கிளாசன், வான் டர் துசென் பொறுப்பாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்தனர். ரஷித் 'சுழலில்' கிளாசன் (64, 11 பவுண்டரி) சிக்கினார். அடுத்து வந்த டேவிட் மில்லர், லிவிங்ஸ்டன் பந்தை சிக்சருக்கு பறக்கவிட, தென் ஆப்ரிக்க அணி 29.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. துசென் (72, 6 பவுண்டரி, 3 சிக்சர்), மில்லர் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

நிகிடி '100'
நேற்று பட்லரை அவுட்டாக்கிய நிகடி, ஒருநாள் அரங்கில் 100 விக்கெட் (66 போட்டி) வீழ்த்தினார். இம்மைல்கல்லை குறைந்த பந்தில் (3048) எட்டிய 2வது தென் ஆப்ரிக்க பவுலரானார். முதலிடத்தில் மார்னே மார்கல் (2859 பந்து) உள்ளார்.

மார்க்ரம் காயம்
நேற்று தென் ஆப்ரிக்க அணியின் ரெகுலர் கேப்டன் பவுமாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், கேப்டன் பொறுப்பை மார்க்ரம் ஏற்றார். 30வது ஓவரின் போது, இவரது வலது தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட, களத்தைவிட்டு வெளியேறினார். எஞ்சிய போட்டியில் மார்க்ரம் பங்கேற்க முடியாத நிலையில், மாற்று வீரராக கார்பின் பாஷ் களமிறக்கப்பட்டார். கேப்டனாக கிளாசன் செயல்பட்டார்.

5 அரைசதம்
நேற்று அசத்திய கிளாசன், ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 5வது அரைசதம் விளாசினார். கடந்த 5 போட்டிகளில் 86 (எதிர் பாக்., 2024, பார்ல்), 97 (எதிர், பாக்., 2024, கேப்டவுன்), 81 (எதிர், பாக்., ஜோகனஸ்பர்க், 2024), 87 (எதிர், பாக்., 2025, கராச்சி), 64 (எதிர், இங்கி., 2025, கராச்சி) என ரன் மழை பொழிந்துள்ளார்.

தொடரும் சோகம்
இங்கிலாந்து தொடர்ந்து 7வது ஒருநாள் போட்டியில் (2024 நவ. -2025 மார்ச்) தோல்வியை சந்தித்தது. 2025ல் மட்டும் 11 சர்வதேச போட்டியில் 10 தோல்வியை (4 'டி-20', 6 ஒருநாள் போட்டி) பெற்றது.

Advertisement