2 எம்.பி., 4 எம்.எல்.ஏ., இருந்தும் வி.சி., கொடியை ஏற்ற முடியவில்லை

சென்னை : ''தமிழகத்தில் இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், வி.சி., கொடியை ஏற்ற முடியவில்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு, சென்னையில் இன்று நடந்தது.
இதில், திருமாவளவன் பேசியதாவது:
நமக்கு அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து, கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும், முற்றாக எதிர்த்துப் போராடுவதும் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. எதிர்ப்பு மனநிலையை வீரம் என்று எண்ணுவோர், அது ஒரு நல்ல வியூகம் அல்ல என்பதை உணர வேண்டும்.
அதிகாரிகள் நம்மிடம் நல்ல பதிலை வழங்குவர். ஆனால், ஒன்றும் நடக்காது. அத்தகைய அதிகாரிகளையும் செயல்பட வைக்க, அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும்.
தற்போது, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், நம்மால் கொடியேற்ற முடியவில்லை. நாம் கொடியேற்றும் போதுதான் சட்டம் பேசுவர்.
இதன் வாயிலாக, இன்னும் அரசியல் வலிமை பெறுவதற்கான தேவையை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே நடைமுறைக்கு வரவில்லை என்பதே, கசப்பான உண்மை. நடைமுறைக்கு வந்திருந்தால், இந்தியா சமத்துவம் பெற்று இருக்கும்.
சனாதன தர்மம் தான் நடைமுறையில் உள்ளது. அதனால், பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இதை தவிர்க்க, 16 - 4ஏ சட்டப்பிரிவு முக்கியம். மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டு, பதவி உயர்வு வழங்க முடியும்.
இதுதொடர்பாக, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம்.
சட்டம் வந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதற்காக, சட்டசபை மற்றும் பார்லிமென்டில் நாம் நுழைய வேண்டிய தேவை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.








