கழிவுநீராக மாறிய பெரியகுளம் துர்நாற்றம் வீசி வரும் அவலம்

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில் சின்னகுளம், பெரியகுளம் என, இரண்டு குளங்கள் உள்ளன. கடந்த நுாற்றாண்டில் இந்த குளங்களே கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கின.
கிராமத்தின் வடக்கில் உள்ள யானை மலையில் இருந்து குளத்திற்கு நீர்வரத்து உள்ளது. பெரியகுளத்தில் இருந்து சின்னகுளத்திற்கு பழமையான நீர்வரத்து கால்வாயும் அமைந்துள்ளது. பெரியகுளத்தில் எப்போதும் நீர் நிரம்பியே இருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்த குளங்கள் பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகின்றன. 2020ல், குளக்கரையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் அமைத்து, மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வந்தன.
பின், இத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது கழிவுநீர் குளமாக மாறியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாய் ஒன்று குளத்தில் இறந்து கிடக்கிறது. அதனுடன் பழகி வந்த மற்றொறு நாய், அந்த சடலத்தை மீட்க போராடி வருகிறது.
நாயின் சடலம் அழுகிய நிலையில் உள்ளதால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, குளக்கரையை சீரமைத்து, கழிவுநீர் செல்லாதவாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.