தேசிய வில்வித்தை போட்டி கும்மிடி மாணவன் தேர்வு

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ரமேஷ் - சியாமளாதேவி தம்பதியின் மகன் பிரகதீஷ்ராஜ், 12. கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் 'க்விக் ஸ்பேரோ' அகாடமியில் வில்வித்தை பயிற்சி பெற்று வருகிறார். இவர், கடந்த வாரம், 'தி ஆர்ச்சரி அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு' சார்பில் நடத்தப்பட்ட, மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 13 வயதுக்கு உட்பட்ட, 'காம்பவுண்ட்' வில்வித்தை பிரிவில்பங்கேற்றார்.
தாம்பரம் அருகே இயங்கி வரும் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில்,தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதல், 10 இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இதில், 324 புள்ளிகளுடன் எட்டாம் இடம்பிடித்த பிரகதீஷ்ராஜ், வரும் 27, 28 மற்றும் 29ம் தேதிகளில், ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.