கிராவல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரடிபுத்துாரில் தொடரும் போராட்டம்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்துார் கிராமத்தில், சர்வே எண்: 51/1ல், 7.58 ஏக்கர் பரப்பளவில் கள்ளாங்குத்து வகையை சேர்ந்த அரசு புறம்போக்கு நிலம்உள்ளது.
அந்த நிலத்தில், சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை திட்ட பணிக்காக, கிராவல் மண் எடுக்க தனியார் நிறுவனத்திற்கு குவாரி விடப்பட்டது.
கிராமத்தின் வளம் சூறையாடப்படுவதாக தெரிவித்து, கரடிபுத்துார் கிராமத்தில் குவாரி விடக்கூடாது என, கிராம சபை கூட்டங்களில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், புதிதாக விடப்பட்ட குவாரிக்கு கரடிபுத்துார் கிராமவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த 24ம் தேதி குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராவல் மண் எடுக்க வந்த 'பொக்லைன்' இயந்திரம் மற்றும் லாரிகளை கிராமவாசிகள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தற்காலிகமாக குவாரி நிறுத்தப்பட்டது.
குவாரியை உடனடியாக ரத்து செய்து, அந்த இடத்தில் வீடு இல்லாத கிராமவாசிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கி தர வேண்டும் என, கிராமத்தினர் சார்பில் கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த 28ம் தேதி ரேஷன், வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளை கிராம வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று மக்கள் எதிர்ப்பை மீறி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குவாரி பணிகள் துவங்கப்பட்டன. அதிருப்தியடைந்த கிராமவாசிகள், வி.ஏ.ஓ., அலுவலகம் முன் பந்தலிட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜேந்திரன், பொன்னேரி ஆர்.டி.ஓ., (பொறுப்பு) கவுசல்யா ஆகியோர் பேச்சு நடத்தினர்.
ஆனால், அவர்களை பேசவிடாமல், குவாரியை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, கிராமவாசிகள் தொடர்ந்து கோஷமிட்டனர். பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். முதலில் கிளம்பிய பேருந்தில், 49 பேர் இருந்த நிலையில், அதில் சென்ற லட்சுமி, 30, என்ற பெண், பேருந்துக்குள் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அதிலிருந்த கிராமவாசிகள் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, 49 பேரையும் பாலவாக்கம்கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதன் காரணமாக, அடுத்தடுத்த பேருந்தில் ஏற மறுத்ததால், போலீசாருக்கும், கிராமவாசிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அஞ்சலை, 52, என்ற பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
பின், கிராமவாசிகளிடம் அரசு துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அரசு திட்ட பணிக்கான குவாரி என்பதால் ரத்து செய்ய முடியாது. வேறு ஒரு இடத்தில் கிராமவாசிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த கிராமவாசிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து சென்றனர். கைது செய்யப்பட்ட 49 பேரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
கிராம வாசிகள் எதிர்ப்பை மீறி, குவாரியில் கிராவல் மண் எடுக்கப்படுவதாலும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள கிராமவாசிகள் கூடி பேசி வருவதாலும், கரடிபுத்துார் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஏதேனும் அசம்பாவிதம்ஏற்படாமல் இருக்க, குவாரி நடக்கும் இடத்திலும், கிராமத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.