மாரடைப்புக்கு முதலுதவி விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி

சென்னை,தமிழ்நாடு இதய இயல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான குழுமம் சார்பில், சி.பி.ஆர்., என்ற 'கார்டியோபுல்மோனரி' புத்துயிர் சிகிச்சை குறித்து, பொது மக்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம், ஷெனாய் நகர் மாநகராட்சி பூங்காவில் நேற்று நடந்தது.

திரைப்பட நடிகர் இளவரசு, விழிப்புணர்வு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு இதய இயல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான குழும அறங்காவலர் சண்முக சுந்தரம் தலைமையிலான மருத்துவ குழுவினர், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதில், திடீரென மயக்கமடைந்த நபருக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து, நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.

இது குறித்து, டாக்டர் சண்முக சுந்தரம் கூறியதாவது:

உலகளவில், ஒரு லட்சம் பேரில், 50 பேர் திடீரென உயிரிழந்து வருகின்றனர். இவற்றிற்கு பிரதான காரணமாக, இதய பாதிப்பு உள்ளது.

உங்கள் முன் யாராவது சரிந்து விழுந்தால், அவர்களின் சுவாசிப்பும், நாடி துடிப்பும் பலவீனமாக இருந்தால், அவை சாதாரண மயக்கமில்லை. கால்களை உயர்த்தி, தோள்களை அசைத்து, சத்தமாக அவர்களை கூப்பிட வேண்டும்.

தொடர்ந்து மயக்க நிலையில் இருந்தால், மார்பின் நடு பகுதியில், இரண்டு கைகளை வைத்து அழுத்தி, அழுத்தி எடுக்க வேண்டும்.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் உதவியையும் அழைக்க அவசரகாலத்தில் உதவும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, தானியங்கி மின்னதிர்வு கருவி இரண்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களான, பேருந்து நிலையம், சந்தை பகுதிகளில் வைக்க, நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி, ஒவ்வொரு மாதமும் மக்கள் கூடும் இடங்களில் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement