மயங்கி விழுந்த பள்ளி சிறுவன் சிறுநீர் பரிசோதனையில் அதிர்ச்சி: சாக்லேட்டில் கலந்திருந்த மருந்து குறித்து திடுக்

கோட்டயம்: கேரளாவில், பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட பின் தலைசுற்றல் ஏற்பட்ட 4 வயது சிறுவனின் சிறுநீரை பரிசோதித்த போது, அதில் மன அழுத்த நோய் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும், 'பென்ஸோடியாசெபைன்' மருந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மனநல பிரச்னை
கேரளாவின், கோட்டயம் மாவட்டம், மனர்காடு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன், கடந்த மாதம் 17ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், தலைசுற்றுவதாக கூறி மயங்கி விழுந்தான். மருத்துவமனையில் அனுமதித்தபோது சிறுவனின் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
அவனது சிறுநீரை பரிசோதித்தபோது அதில், 'பென்ஸோடியாசெபைன்' மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் இந்த, 'பென்ஸோடியாசெபைன்' மிக முக்கியமானது. இது, சிறுவனின் உடலுக்குள் எப்படி சென்றது என்பது புதிராகவே உள்ளது.
சிறுவன் மயங்கி விழுந்த தினத்தன்று, பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்கு முன், சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்ததாக பள்ளி ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். சிறுவனின் குடும்பத்தார் இதைப்பற்றி செய்தி தொலைக்காட்சியில் நேற்று பேட்டி அளித்ததை தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், சிறுவன் படிக்கும் தனியார் பள்ளி தரப்பில் அலட்சியம் எதுவும் கண்டறியப்படவில்லை. பள்ளியில் இருந்து தன் தாத்தாவுடன் வீடு திரும்பும் வரை சிறுவன் நலமுடனே இருந்ததாக பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
மறுப்பு
மேலும், சிறுவன் மயங்கி விழுந்த அன்று அவன் சாப்பிட்ட சாக்லேட்டை மற்றொரு சிறுவனுடன் அவன் பகிர்ந்ததாகவும், அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த சாக்லேட்டை, தன் தாயார் தான் கொடுத்ததாக அந்த சிறுவன் தெரிவித்தான். அதை அவனது தாய் மறுத்துள்ளார்.
அந்த பெண், 'லேப் டெக்னிஷியன்' ஆக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து தனியாக மகனுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவன் சாப்பிட்ட சாக்லேட்டில் தான் பென்ஸோடியாசெபைன் மருந்து கலந்திருந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்
-
திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்