2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண் பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்

புதுடில்லி: 'வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், அது போலி என்று கூற முடியாது' என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. அங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது: தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்காக மோசடி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், குஜராத், ஹரியானாவில் உள்ள வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி வாக்காளர்களை உருவாக்கி, இங்கு தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது. மஹாராஷ்டிரா, டில்லியில் உள்ள கட்சிகள் இதை கண்டுபிடிக்கவில்லை. அங்கு நடந்த சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ., இப்படித்தான் போலி அடையாள அட்டை வாயிலாக வென்றுள்ளது. மேற்கு வங்கத்தில் அதுபோல் மோசடி செய்ய விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது: ஒரு மாநிலத்தில் உள்ள வாக்காளருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை எண் போலவே, மற்றொரு மாநிலத்தில் உள்ள வாக்காளருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது போன்று, ஒரே அடையாள எண் இரண்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இதை போலி என கூறமுடியாது. ஆனால், அவர்களுடைய வசிப்பிட விபரம், சட்டசபை தொகுதி விபரம், ஓட்டுச் சாவடி விபரம் வெவ்வேறாக இருக்கும்.
வாக்காளர் அடையாள அட்டையில் கூறப்பட்டு உள்ள ஓட்டுச் சாவடியில் மட்டுமே ஓட்டளிக்க முடியும். ஒரே அடையாள எண் இருப்பதால், ஒரு மாநிலத்தில் உள்ளவர், மற்றொரு மாநிலத்தில் ஓட்டளிக்க முடியாது.
தேர்தல் தொடர்பான தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதற்கு முன், அந்தந்த மாநிலங்களில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகளே, இவ்வாறு எண்களை ஒதுக்கினர். அதனால், ஒரே எண், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இரண்டு பேருக்கு கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், இந்த விஷயத்தில், ஒவ்வொரு வாக்காளருக்கும் தனி குறியீட்டு எண்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







மேலும்
-
போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்
-
திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்