பணி செய்த நிறுவனத்தில் திருடிய காவலாளி கைது

சென்னை, நுங்கம்பாக்கம், திருமூர்த்தி நகரில் உள்ள கட்டுமான நிறுவனம், தி.நகர் அபிபுல்லா சாலையில், நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டடம் கட்டி வருகிறது. இதில், திட்ட மேலாளராக இளநிலை பொறியாளர் கார்த்தி பணியாற்றி வருகிறார்.

கடந்த 11ம் தேதி, கட்டுமான இடத்தில் உள்ள மேஜையில் வைத்திருந்த கார்த்திக்கின் பர்ஸ் காணாமல் போனது. அதில், 4,000 ரூபாய் இருந்தது. மேலும், கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளும் திருடப்பட்டு வந்தன.

இதுகுறித்து, கட்டுமான நிறுவன மேலாளர் முருகானந்தம், 50, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த முத்துகுமார், 28, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement