வேலை வாங்கி தருவதாக மோசடி அரசு ஊழியர்கள் கைது

சென்னை, திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பரசு, 35. இவர், அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சென்று வரும்போது, அறநிலையத்துறை ஊழியர் அய்யப்பன், 42, என்பவர் பழக்கமாகி உள்ளார்.

பழக்க வழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட அய்யப்பன், 'கடலோர காவல் படையில் பணிபுரியும் ஹேமலதா என்பவரை தெரியும், அவர் வாயிலாக உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருகிறேன்' எனக்கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பி, 17 லட்சம் ரூபாய் அன்பரசு கொடுத்துள்ளார். ஆனால் அய்யப்பனும், ஹேமலதாவும் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து, அன்பரசு சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், அன்பரசு உட்பட 32 பேரிடம் இருந்து, 1.40 கோடி ரூபாய் பெற்று, இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், உயர் நீதிமன்றத்திற்கு வரவழைத்து, நேர்முகத்தேர்வு நடத்துவது போல நடத்தி, போலி பணி ஆணை வழங்கியதும் அம்பலமாகி உள்ளது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட வடபழனியைச் சேர்ந்த ஹேமலதா, 51, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அய்யப்பன், 42, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹேமலதா, ஏற்கனவே கடலோர காவல் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

Advertisement