முன்னாள் எம்.எல்.ஏ., மீதான வழக்கை 6 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சாத்துார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் வழக்கு விசாரணையை, விரைந்து முடிக்கும்படி, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சக்தி நகரை சேர்ந்த தொழிலதிபர் கம்மாபட்டி ரவிச்சந்திரன்.
இவர், 2018ல், சாத்துார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், அ.தி.மு.க., நிர்வாகிகள் தங்கமுனியசாமி, நரிக்குடியை சேர்ந்த ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து, வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கி நடத்தி வந்தார்.
பின், 2019 செப்டம்பரில், ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும், தங்களின் பங்குத் தொகையை பெற்றுக் கொண்டு, தொழிலில் இருந்து விலகினர்.
இந்நிலையில், 2019 அக்டோபரில் தொழிலதிபர் ரவிச்சந்திரனை கடத்தி, ராஜவர்மன் உள்ளிட்டோர், 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.
இச்சம்பவம் குறித்த புகாரை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார், ராஜவர்மன் உட்பட ஆறு பேருக்கு எதிராக, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கடந்தாண்டு பிப்ரவரியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தொழிலதிபர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜவர்மன் உள்ளிட்டோர், சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராவதில்லை. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.
'எனவே, வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'இவ்வழக்கை ஆறு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்