அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 85 வயது முதியவர் உள்பட மூவர் மீது போக்சோ வழக்கு

ஊட்டி: நீலகிரியில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 85 வயது முதியவர் உள்பட மூவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதியின், 15 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கு, உறவினர் உட்பட அப்பகுதியை சேர்ந்த, 3 பேர் பள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து, ரூரல் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவியின், 35 வயதான உறவினர், அதே பகுதியில் வசிக்கும், 25 வயதான வாலிபர், 85 வயதான முதியவர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.


இது குறித்து ரூரல் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் கூறுகையில், "இந்த புகார் தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 35, 25 வயதுடைய இரு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தோம். 85 வயதான, உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரிடம் விசாரணை நடந்து வருகிறது," என்றார்.

Advertisement