ரூ.5.60 லட்சம் லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

10


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால், புகார்கள் வரும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை நடத்துவது வழக்கமாகும்.

அந்த வகையில், ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் ( தரக்கட்டுப்பாட்டு பிரிவு) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.5.60 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.3,63,000 கைப்பற்றப்பட்டது. மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், புதுக்கோட்டை சார் பதிவாளர் செல்வகுமார் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement