சிறுத்தை உயிருடன் மீட்பு

பந்தலூர்:கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடியில், தோட்டத்து வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
தமிழக எல்லையான பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது, கேரள மாநிலம் வயநாடு. இங்கு மேப்பாடி நெடும்பாலா என்ற இடத்தில், சிறுத்தை ஒன்று தோட்டத்து வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது தெரிய வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வயநாடு வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை வலையில் போட்டு வைத்திரி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
சிறுத்தையின் கால் மற்றும் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சிறுத்தை அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக உலா வந்த நிலையில், தோட்டத்து வேலியில் சிக்கி, மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.