ஆங்கிலம் பற்றி நீங்கள் பேசலாமா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: ''மற்றவர்களின் மொழித்திறன் குறித்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் கற்றல் திறன் எப்படி இருக்கிறது என்பதை ஏ.எஸ்.இ.ஆரின் சமீபத்திய அறிக்கையை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவியை விமர்சித்து இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக தமிழகத்தின் இருமொழி கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என்று கவர்னர் புதுச்சரடு விடுவதாக' விமர்சித்திருந்தார்.
மேலும், வட இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளை பள்ளிகளில் கற்றுத்தருகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை; புதிய தேசிய கல்விக் கொள்கையானது சரிசமமான கல்வியை உருவாக்குகிறது. தனியார் பள்ளிகளுக்கு உயர்தரத்திலான கல்வி முறையை அனுமதிக்கும் நீங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உங்களின் விருப்பத்தை திணிப்பது தான் சீரற்ற கல்வி கட்டமைப்பாகும்.
உங்களின் தேவைக்கேற்ப எங்களது கேள்வியை மாற்றி மாற்றி வைத்து பேசுவதுதான் வியப்பளிக்கிறது. உங்களின் குடும்பத்தினரும், உங்களது அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகள் உள்பட தனியார் பள்ளிகளுக்கு 3வது மொழியை அனுமதிக்கும் போது, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 3வது மொழி பயில அனுமதி மறுப்பது ஏன்? என்பது தான் எங்களின் கேள்வி.
வட இந்திய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறும் முதல்வர் ஸ்டாலினின் ஆங்கிலப் புலமை எப்படி இருக்கிறது? மற்றவர்களின் மொழித் திறன் குறித்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின், நமது அரசுப் பள்ளியில் பயிலும் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் கற்றல் திறன் எப்படி இருக்கிறது என்பதை ஏ.எஸ்.இ.ஆரின் சமீபத்திய அறிக்கையை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களின் பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நமது மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
