நிலை அறிக்கையில் திட்டங்களை அறிவிக்க மா விவசாயிகள் கோரிக்கை

நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவிக்க மா விவசாயிகள் கோரிக்கை


கிருஷ்ணகிரி:மா விவசாயிகளை காக்க, வரும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவிக்க, மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு செயலாளர் சவுந்திரராஜன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில், மா உற்பத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40,000 ஹெக்டேருக்கு மேல் மாமரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், 2.50 லட்சம் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தாண்டு மா பூக்கள் கால தாமதமாக பூத்துள்ளன.
ஆனால், கடும் வெயிலால் மா பிஞ்சுகள் உதிர்கின்றன. விவசாயிகள் இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு மா உற்பத்தியை அதிகரிக்க, போராடி வருகின்றனர். மாவை தாக்கும் பூச்சிகளை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
மாங்கூழ் ஏற்றுமதியில் நாட்டிற்கு அன்னிய செலாவணி அதிகம் கிடைத்தாலும், மா சாகுபடிக்கு இதுவரை எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை. கடந்த, 3 ஆண்டுகளாக உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், மாங்கனி விவசாயிகளை பற்றி, ஒரு அறிவிப்பும் இல்லை. கடந்த ஆண்டு, 90 சதவீதம் மா மகசூல் பாதிக்கப்பட்டது. மகசூல் பாதிப்பு குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
ஆனாலும் இதுவரை நிவாரணம் உறுதி செய்யப்படவில்லை. இதனால், மா விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, வரும் நிதிநிலை அறிக்கையில், மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை அறிவித்து, மா விவசாயிகளை காக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.




Advertisement