ராமஜெயம் கொலை வழக்கு; அதிகாரிகள் மாற்றம்

10


சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளை சென்னை ஐகோர்ட் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.


அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, திருச்சி, தில்லை நகரில் நடைபயிற்சி சென்ற போது, கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி போலீஸ் முதல் சி.பி.ஐ., வரை விசாரித்தும், இதுவரையில் கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை.


இந்த சூழலில், இந்த வழக்கை சி.பி.ஐ., வசமிருந்து மாநில போலீஸாருக்கு மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2022ம் ஆண்டு விசாரித்த நீதிபதிகள், போலீஸாரின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டு வந்தது.


இதனிடையே, இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஆனால், சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த ஜெயக்குமார் திருவாரூர் எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதனை கேட்ட சென்னை ஐகோர்ட், ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., மற்றும் தஞ்சை எஸ்.பி., ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement