ரோகித் ஷர்மாவை பாடி ஷேமிங் செய்யவில்லை... கடும் எதிர்ப்பால் பணிந்தார் காங்., பெண் நிர்வாகி

6

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் உடல் எடை குறித்து காங்கிரஸ் பெண் நிர்வாகி ஷாமா முகமது பேசியது சர்ச்சையான நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்றைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வென்று ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, நாளை நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

நியூசி.,க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 15 ரன்கள் மட்டும் அடித்து ஆட்டமிழந்தார்.


இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது, கேப்டன் ரோஹித்தை விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார்.

"ஸ்போர்ட்ஸ் மேனாக பார்த்தால் ரோஹித் அதிக எடை கொண்டவராக இருக்கிறார். அவர் எடையைக் குறைக்க வேண்டும். இந்தியா இதுவரை பார்த்த கேப்டன்களில், இவர்தான் மிகவும் ஈர்க்கப்படாதவராக இருக்கிறார்" என ஷாமா முகமது கூறினார்.


இதற்கு, கிரிக்கெட் ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உஷாரான காங்கிரஸ், ஷாமா முகமதுவின் கருத்து, கட்சியின் கருத்து இல்லை என்று தெரிவித்தது. இச்சூழலில், ரோஹித் ஷர்மா பற்றி பதிவிட்ட கருத்தை ஷாமா முகமது நீக்கிவிட்டார்.


இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி,"இதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். இந்திய அரசியலில் தோல்வியடைந்த பிறகு, ராகுல் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்," என கமென்ட் அடித்துள்ளார்.

இருப்பினும், தன்னுடைய கருத்து குறித்து விளக்கம் அளித்த ஷாமா முகமது, 'ரோகித் ஷர்மாவை பாடி ஷேமிங் செய்யவில்லை. உடல் பிட்னஸ் தொடர்பாக பொதுவாகத்தான் சொன்னேன். விளையாட்டு வீரர்கள் பிட்னஸாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால், ரோகித் ஷர்மா கொஞ்சம் உடல் எடை கொண்டுள்ளதாக எனக்கு தோன்றுகிறது. தோனி, கோலி, கங்குலி, டிராவிட், கபில் தேவ் உள்ளிட்ட முந்தைய கேப்டன்களை ஒப்பிட்டு தான் அந்தக் கருத்தை பதிவிட்டேன்,' இவ்வாறு கூறினார்.


என்னதான், இவர் விளக்கம் கொடுத்தாலும், ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement