பிளஸ் 2 தமிழ் தேர்வு ஈசி: மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னை: 'தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாள் தேர்வான, தமிழ் மொழி பாடத்தேர்வில் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்தது' என, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.



தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 3,316 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. இதை எழுத, 3.78 லட்சம் மாணவர்கள், 4.24 லட்சம் மாணவியர், 18,344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என, 8.21 லட்சம் பேர் விண்ணப்பித்துஇருந்தனர்.


அவர்களை கண்காணிக்க, 43,446 கண்காணிப்பாளர்கள், 4,470 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டனர். நேற்று 11,430 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம், 8 லட்சத்து 2,568 பேர் தேர்வு எழுதினர்.



சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை, 242 தேர்வு மையங்களில், 65,641 மாணவ - மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதும் வகையில், 310 பேர் மாற்று எழுத்தாளராக பங்கேற்றனர்.


சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் லதா, சென்னை மாவட்ட தேர்வு பொறுப்பு அதிகாரியான பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


தேர்வு குறித்து மாணவர்கள், 'தமிழ் மொழி பாடத்தேர்வில், வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. எனவே, நன்றாக தேர்வு எழுதினோம்' என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Advertisement