கூட்டுறவு வங்கிகளில் ரூ.3 கோடி கல்வி கடன் 

சென்னை : கூட்டுறவு வங்கிகளில், 2,500 பேருக்கு, 3 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், ஒரு லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டது. இந்த விபரம் பலருக்கு தெரியவில்லை. சமீப காலமாக, உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், கூட்டுறவு வங்கிகளில், கல்விக்கடன் உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாயாக, 2024 பிப்ரவரியில் உயர்த்தப்பட்டது. இதுவரை, 2,500 நபருக்கு, 3 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகளில், கடந்த ஆண்டு, 800 மாணவர்களுக்கு, 75 லட்சம் ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கல்விக் கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால், 25 கோடி ரூபாய்க்கு மேல், கல்விக்கடன் வாங்குவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 கோடி ரூபாய் தான் கடன் பெற்றுள்ளனர்.

கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில், இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களும், டிப்ளமா படிப்பவர்களும் தான், கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வாங்குகின்றனர். கல்விக் கடனில், ஆண்டுக்கு சராசரியாக தலா ஒருவருக்கு, 20,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஒருவர் படிக்கும் காலம் முழுதும் சேர்த்து, 60,000 முதல் 75,000 ரூபாய் வரை கடன் பெறுவர். கூட்டுறவு வங்கிகளில், கல்விக்கடன் வழங்கப்படுவது குறித்து, இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப உயர்கல்வி பயிலும் மாணவர்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, வங்கி அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement