பைனலுக்கு முன்னேறுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் அரையிறுதி மோதல்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா மோதுகின்றன. இந்தியா வென்று, பைனலுக்கு முன்னேற காத்திருக்கிறது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

வலுவான பேட்டிங்: இந்திய அணி வரிசையாக வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் (6 புள்ளி) பிடித்தது. நுாறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங் பலமாக உள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக கேப்டன் ரோகித் (41), சுப்மன் கில் (101) அசத்தினர். பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த கோலி சதம் விளாசினார். 'மிடில் ஆர்டரில்' ஸ்ரேயாஸ், அக்சர் படேல் நம்பிக்கை தருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிராக ஸ்ரேயாஸ் 79 ரன் அடித்து, அணியை மீட்டார். பின்வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா கைகொடுக்கின்றனர். ராகுலுக்கு பதில் ரிஷாப் பன்ட் இடம் பெறலாம்.


வருவாரா வருண்: வேகப்பந்துவீச்சில் ஷமி, ஹர்ஷித் ராணா மிரட்டலாம். நியூசிலாந்துக்கு எதிராக நான்கு 'ஸ்பின்னர்'களுடன் இந்தியா களமிறங்கியது. இதில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு வித்திட்டார். துபாய் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் என்பதால், இன்றும் அதிக 'ஸ்பின்னர்'கள் இடம் பெறுவது உறுதி. ஒட்டுமொத்தமாக இந்திய அணி வலுவாக இருப்பதால், பைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உண்டு.

பவுலிங் பலவீனம்: ஆஸ்திரேலிய அணி முதலில் இங்கிலாந்தை வென்றது. தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட, முடிவு கிடைக்கவில்லை. 'பி' பிரிவில் 2வது இடம் (4 புள்ளி) பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் என மூன்று நட்சத்திர பவுலர்கள் இல்லாதது பலவீனம். இந்த குறையை, வலுவான பேட்டிங் படையை வைத்து சமாளிக்கிறது. லாகூரில், இங்கிலாந்து நிர்ணியித்த 352 ரன் இலக்கை அசராமல் விரட்டி, வெற்றி பெற்றது. ரன் குவிக்க கேப்டன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், லபுசேன், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி உள்ளனர்.


வருகிறார் கொனாலி: மாத்யூ ஷார்ட் காயத்தால் விலகியது பின்னடைவு. இவருக்கு பதில் 21 வயது இளம் ஸ்பின்னர், ஆல்-ரவுண்டர் கூப்பர் கொனாலி சேர்க்கப்பட்டுள்ளார். டிவார்ஷியஸ், எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன் போன்ற அனுபவம் இல்லாத பவுலர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர். 'ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக' ஜாம்பா மட்டுமே உள்ளார். ஆஸ்திரேலிய அணியில் உலகத் தரமான பவுலர்கள் இல்லாததை, இந்திய பேட்டர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடரும் ஆதிக்கம்
ஐ.சி.சி., 'நாக் அவுட்' போட்டியில் இந்தியாவுக்கு எதிராக கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது. கடைசியாக 2011, உலக கோப்பை (50 ஓவர்) காலிறுதியில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு பின் 2015, உலக கோப்பை அரையிறுதி, 2023, உலக கோப்பை பைனல், 2023ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என அனைத்திலும் இந்திய அணியை ஆஸ்திரேலியா வென்றது. இப்போட்டிகளில் சதம் விளாசி இந்திய அணிக்கு 'வில்லனாக' இருந்த டிராவிஸ் ஹெட் மீண்டும் தொல்லை கொடுக்கலாம்.
இம்முறை இந்திய அணி 'ஸ்பின்னர்'களை நம்பி களமிறங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிராக வருண் சக்ரவர்த்தி (5), ஜடேஜா (1), அக்சர் படேல் (1), குல்தீப் (2) சேர்ந்து 9 விக்கெட் வீழ்த்தினர். 37.3 ஓவரில் 128 'டாட் பால்' வீசி, நியூசிலாந்தை திணறடித்தனர். இதே போல இன்று ஆஸ்திரேலியாவுக்கும் வலை விரிக்கலாம்.

சரியான கூட்டணி
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தொடர்ந்து துபாயில் விளையாடுகிறது. இது சாதகமான விஷயம் என்று எதிரணிகள் விமர்சிக்கின்றன. இதை மறுத்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''இந்தியாவின் சொந்த மண் துபாய் அல்ல. இங்கு அதிக போட்டிகளில் விளையாடியது இல்லை. அரையிறுதிக்கு எந்த ஆடுகளம் பயன்படுத்தப்படும் என தெரியாது.
ஐ.சி.சி., தொடரின் வரலாற்றில் ஆஸ்திரேலியா சாதிப்பது வழக்கம். அரையிறுதி என்பதால், இரு அணிகளுக்கும் நெருக்கடி இருக்கும். இம்முறை சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நான்கு 'ஸ்பின்னர்'களுடன் விளையாட மனம் விரும்புகிறது. அனைவரையும் சேர்ப்பது கடினம். சூழ்நிலைக்கேற்ப, சரியான கூட்டணியை முடிவு செய்வோம்,''என்றார்.

மழை வருமா
துபாயில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பமான வானிலை காணப்படும்.
* துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆடுகளம் மந்தமாக இருக்கும். 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்
* ஒருநாள் அரங்கில் இரு அணிகளும் 151 ஒருநாள் போட்டியில் மோதின. ஆஸ்திரேலியா 84, இந்தியா 57ல் வென்றன. 10 போட்டிக்கு முடிவு இல்லை.
* சாம்பியன்ஸ் டிராபியில் 4 முறை மோதின. இந்தியா 2, ஆஸ்திரேலியா 1ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* துபாயில் இரு அணிகளும் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் மோத உள்ளன.

யார் அம்பயர்
அரையிறுதி போட்டிக்கான கள அம்பயர்களாக கிறிஸ் கபானி (நியூசி.,), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கி.,), மூன்றாவது அம்பயராக மைக்கேல் காப் (இங்கி.,), மேட்ச் ரெப்ரியாக ஆன்டி பைகிராப்ட் (ஜிம்ப்.,) செயல்பட உள்ளனர்.

Advertisement