டீயில் எலி பேஸ்ட் கலந்து காதலனுக்கு கொடுத்த காதலி; வாட்ஸாப் உரையாடலால் உடைந்தது 'குட்டு'

திருவெண்ணெய்நல்லுார் : காதலை கைவிட நினைத்த காதலனுக்கு, காதலி டீயில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கீரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா, 24; ஆந்திர சட்டக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்.



இவர், தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பெண்ணை, சில ஆண்டுகளாக காதலித்தார். இருவரும் அண்ணன், தங்கை உறவு என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஜெயசூர்யா காதலை கைவிட முடிவு செய்து, அந்த பெண்ணிடம் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனால், சில மாதங்களாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிப்., 2ம் தேதி இரவு, 7:30 மணியளவில் அந்த பெண் வீட்டிற்கு சென்ற ஜெயசூர்யாவிற்கு டீ கொடுத்துஉள்ளார்.

அன்று இரவு, 11:00 மணியளவில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மறுநாள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


மருத்துவமனை தகவலில், அங்கு சென்ற திருவெண்ணெய்நல்லுார் போலீசாரிடம், ஜெயசூர்யா, 'குடும்ப பிரச்னை காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டேன்' என, தெரிவித்துள்ளார்.



ஆனால், ஜெயசூர்யாவுக்கும், அவரது காதலிக்கும் ஏற்பட்ட பிரச்னையில், காதலி டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த விபரம் கசிந்தது. ஜெயசூர்யாவின் மொபைல் போனில் இருந்த வாட்ஸாப் உரையாடல், இதை உறுதிப்படுத்தியது.


ஜெயசூர்யா தந்தை, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அப்பெண் மீது புகார் அளித்துள்ளார்.


நேற்று முன்தினம் மருத்துவமனையில் ஜெயசூர்யாவிடம் போலீசார் விசாரித்த போது, 'அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியதால், ஆத்திரமடைந்து டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்தார். அதை நான் குடித்து விட்டேன்' எனக் கூறியுள்ளார்.


தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement