கொஞ்சம் நெகிழ்ச்சி... கொஞ்சம் அச்சம்... நிறைய மெத்தனம்! ஒன்றாக சேர்ந்தால் போலீசின் ஒரு நாள் நள்ளிரவு வாகன தணிக்கை

திருப்பூர் மாநகர பகுதியில் குற்ற தடுப்பு, குற்றங்களை கண்டறியும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அந்தந்த ஸ்டேஷன் எல்லை பகுதியில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன தணிக்கை செய்கின்றனர்.
இதுதவிர குடியிருப்பு பகுதிகளில் போலீசார் ரோந்து செல்கின்றனர். மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, சுதந்திரமாக போலீசார் முடிவு எடுத்து செயல்படும் வகையில் 'டெடிகேட்டடு பீட்' ரோந்தும் உள்ளது. இதுபோன்ற அனைத்து கண்காணிப்பு பணிகளும் சுழற்சி முறையில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோல், போலீசார் வாகன தணிக்கை, ரோந்து மேற்கொள்ளும் போது சமீபத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளில் அவர்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டும் வகையிலும், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும் சில நிகழ்வுகள் நடக்கிறது. ஒரு சில போலீசார் நள்ளிரவு ரோந்தில் கூட மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டது பலரையும் வேதனையில் ஆழ்த்தியது.
அப்படி, நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் போலீசாரின் வாகன தணிக்கையின் போது நடந்த மூன்று சம்பவங்களை பார்க்கலாம்.
ஒரு குடும்பத்தைகாப்பாற்றிய செயல்
திருப்பூர், 15 வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் ரோட்டில், ஒரு எஸ்.ஐ., தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அந்த ரோட்டையொட்டி ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பெண் ஒருவர் நடந்து செல்வதை எஸ்.ஐ., பார்த்தார். உடனே, பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு ரங்கநாதபுரத்தை சேர்ந்த, 33 வயது பெண், கணவர், இரு குழந்தைகளுடன் வசித்து வருவதும், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தண்டவாளத்தில் நடந்து சென்றது தெரிந்தது. சரியான நேரத்தில் அப்பெண்ணை மீட்ட காரணத்தால், ஒரு உயிர் மட்டுமல்ல. ஒரு குடும்பமே காப்பாற்றப்பட்டது. அடுத்ததாக, அப்பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கி வீட்டிற்கு அழைத்து சென்று, கணவருக்கும் அறிவுரை வழங்கி திரும்பினர்.
இரு நாள் முன், நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோவில் வழியில் வீட்டில் கோபித்து கொண்டு வெளியேறி வந்த, 13 வயது சிறுவன் சந்தேகப்படும் வகையில் இரவில் சுற்றி வந்தார். அவரிடம் விசாரித்து வீட்டுக்கு அழைத்து சென்று அறிவுரை வழங்கி பெற்றோரிடம், போலீசார் ஒப்படைத்தனர். மகனை காணாமல் ஆழ்ந்த கவலையில் இருந்த குடும்பம் மகிழ்ச்சி அடைந்தது.
அச்சத்தை ஏற்படுத்தியஇளைஞரின் செயல்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலம் அருகே நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிகவேகத்தில் இரண்டு டூவீலரில் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்த சென்றனர். இதனை பார்த்து கொண்டே டூவீலரில் வந்தவர்கள், உடனே, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.
அப்போது ஒரு வண்டியில் இருந்து சாவியை போலீஸ்காரர் ஒருவர் எடுக்க முயன்ற போது, மற்றொரு பைக்கில் இருந்த வாலிபர்கள் டூவீலரின் ஆக்ஸிலேட்டரை முறுக்கிய படி வந்து போலீசார் மீது மோதுவது போல் சென்று, ஒருவழிபாதையில் தப்பி சென்றனர். நொடிக்கும் குறைவான நேரத்தில் உயிர் தப்பித்த போலீசார், 'ஆள விடுங்க சாமி,' என நினைத்து, இதுகுறித்து உயரதிகாரிகளுக்கும் தெரிவிக்காமல், தங்களது பணியினை 'செவ்வனே' தொடர ஆரம்பித்தனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை கண்டித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மற்றவர்களும் விதிமுறைகளை கடைப்பிடிப்பர்.
மனிதாபிமானம்காட்டாத செயல்
திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள், இருவர் பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர். மங்கலத்துக்கு முன்னதாக டூவீலரில் பெட்ரோல் இல்லாமல் வாகனம் நின்றது. அதனை ஒரு கி.மீ., துாரம் தள்ளியபடி மங்கலம் நால் ரோட்டை சென்றடைந்தனர். அப்பகுதியில், நள்ளிரவு பணியில் இருந்து எஸ்.ஐ., உள்ளிட்ட, ஐந்து போலீசாரிடம், தங்கள் விபரங்கள் குறித்து தெரிவித்து, பெட்ரோல் வாங்கி வர வாகனத்தை கொடுத்து உதவ கேட்டனர்.
ஆனால், பணியில் இருந்த போலீசார் மிகவும் மெத்தனத்துடன் நடந்து கொண்டனர். 'தங்களிடம் வாகனம் ஏதுமில்லை' என்று கூறிய அடுத்த நிமிடம், டீ வாங்க டூவீலர் ஒன்றை எடுத்து சென்றனர். ஆனால், அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு அழைத்து செல்லும் எண்ணமும் கூட வரவில்லை. நள்ளிரவில் வாகன தணிக்கையில் இருக்கும் போலீசாரிடம் வாகனம் இல்லையென்றால், அவ்வழியாக ஏதாவது அசம்பாவிதத்தில் ஈடுபட்டு வரும் நபர் குறித்து தெரியவந்தால், எப்படி குற்றவாளிகளை பிடிப்பார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்வி. நீண்ட நேரமாக நின்று போலீசாரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காத காரணத்தால் வாகனத்தை தள்ளியபடி வீட்டுக்கு சென்றனர்.
அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், 'காவல் துறை உங்கள் நண்பன்' என்று எழுதி வைத்துள்ளனர். ஆனால், மங்கலம் போலீசார் நடந்து கொண்ட விதம், அந்த வாசகத்துக்கும் துளியும் பொருத்தமில்லை என்றே நினைக்க தோன்றுகிறது என்று மக்கள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை