குறைகேட்பு கூட்டத்தில் குறைகளை 'குவித்த' மக்கள்; ஆய்வு செய்து தீர்வு காண்பார்களா அதிகாரிகள்

திருப்பூர்; நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகள், குறைகளை சுட்டிக்காட்டி, பொதுமக்கள் 631 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜா ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பல்லடம் ரோடா'பார்' ரோடா?
பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ., முன்னாள் தலைவர் பூபாலன்:
கரைப்புதுார் ஊராட்சியில், அருள்புரம், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், உப்பிலிபாளையம், குன்னாங்கல் பாளையம், சின்னக்கரை பகுதிகளில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். கரைப்புதுார் ஊராட்சியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் மதுக்கடை, மூன்று தனியார் பார்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக ஒரு தனியார் பார் திறக்க உள்ளனர். அருகாமையிலேயே பள்ளி அமைந்துள்ளதால், மாணவர்கள், பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படும்.
எனவே, தனியார் பார் திறக்க அனுமதி அளிக்க கூடாது. இல்லையென்றால், பல்லடம் ரோட்டை, 'பார் ரோடு' என பெயர் மாற்றம் செய்யவேண்டும்.
மாற்றுத்திறனாளி வேதனை
ஆண்டிபாளையம், குளத்துப்புதுார், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணன். வண்டி கடையில் உணவகம் நடத்திவரும் இவர், கடை மேம்பாட்டுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாகவும், கடன் பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரி, மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து மனு அளித்தார்.
அபாய நிலையில் வீடு
உடுமலை தாலுகா, எரிசனம்பட்டி கிராமம், ஏ.டி., காலனி மக்கள்:
எங்களுக்கு 35 ஆண்டுகளுக்கு முன், தொகுப்பு வீடு கட்டித்தரப்பட்டது. தற்போது அந்த வீடுகள், இடிந்து விழும் நிலையில் உள்ளன. தற்போது ஒவ்வொரு வீட்டிலும், ஐந்து முதல் பத்து நபர்கள் வசிக்கிறோம்.
சொந்தமாக நிலம் இல்லாத எங்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீடுகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு சென்டுக்கும் குறைவாகவே சுடுகாடு உள்ளதால் இறந்தவர்களை புதைப்பது சிரமமாகிறது. சுடுகாட்டை விரிவாக்கம் செய்ய, நிலம் வழங்க வேண்டும்.
கண்ணுல கூட காட்டல...
பட்டா நிலத்தை கண்ணில் காட்டாமலேயே, பட்டாவை ரத்து செய்துவிட்டதாக, அவிநாசி தாலுகா, வள்ளிபுரம் பகுதி மக்கள் புகார் மனு அளித்து கூறியதாவது:
வள்ளிபுரம் கிராமத்தில், 39 பேருக்கு, 2008ல், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டா இடத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்துதரப்பட வில்லை. நாங்கள் அதே கிராமத்தில், சிறிய வீடுகளில், வசித்து வருகிறோம்.
இந்நிலையில், 15 ஆண்டுகளாகியும் குடியேறாததை காரணம்காட்டி, பட்டாவை ரத்து செய்ய வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். அந்நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். 39 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட பட்டாவுக்கான நிலத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும்.
ரோடு படுமோசம்
நெருப்பெரிச்சல் மண்டல பா.ஜ., தலைவர் உதயகுமார்:
திருப்பூர் மாநகராட்சி, 2ம் மண்டலம் நெருப்பெரிச்சலுக்கு உட்பட்ட தியாகி பழனிசாமி நகர் பகுதியில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன. குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ரோட்டில் சிதறியுள்ள குப்பையால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்றியும், குண்டும் குழியுமான ரோட்டை சீரமைத்து தரவேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம், 631 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை