ஏலச் சீட்டு நடத்தி பெரும் மோசடி: தம்பதி 'ஓட்டம்'

திருப்பூர்; திருப்பூரில், சிறுபூலுவப்பட்டி அடுத்த அம்மன் நகரில் ராஜேஸ்வரன் என்பவர் மளிகைக் கடை வைத்திருந்தார்.

பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அப்பகுதியினர் ஏராளமானோர், சீட்டில் சேர்ந்து தொகை செலுத்தினர். இந்நிலையில், வீடு மற்றும் கடையை காலி செய்துவிட்டு, தம்பதியர் தலைமறைவாகினர்.

அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டோர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து, நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:

சீட்டு தொகை மற்றும் வட்டி வாங்கி தருவதாக கூறியும் பணம் வசூலித்துவிட்டு, திடீரென வீடு, கடையை காலி செய்து, குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டனர்.

மொபைல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளமுடியவில்லை. குழந்தைகளின் கல்வி, எதிர்கால சேமிப்புக்காக நாங்கள் செலுத்திவந்த தொகையை இழந்துள்ளோம். மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ள ராஜேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்ய திருமுருகன்பூண்டி போலீசார் மறுக்கின்றனர்.

சீட்டு மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இழந்த தொகையை பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement