தெலுங்கானா சுரங்க இடிபாடு தகவல் வெளியிட அரசு தயக்கம்

நாகர்கர்னுால்: ஸ்ரீசைலம் அணைச் சுரங்கத்தில் சிக்கிய எட்டு பேரின் நிலைமை குறித்து உறுதியாக தெரியாமல், அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட முடியாது என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.


தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து பல லட்சம் ஏக்கர் நீர்ப்பாசன வசதிக்காக, 44 கி.மீ., நீள சுரங்கம் அமைக்கப்படுகிறது.

கடந்த பிப்.,22ல் பணி நடந்தபோது மேற்கூரை சரிந்து, இரண்டு என்ஜினீயர்கள் உட்பட எட்டு பேர் சிக்கிக் கொண்டனர். 10 நாட்களுக்கு மேலாக அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.



தேசிய புவியியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் உதவியோடு, தரையில் ஊடுருவும் ரேடார் கருவி மூலம் சோதனை நடந்தபோது, ஒரு இடத்தில் நான்கு பேர் புதைந்து கிடப்பதாக கூறப்பட்டது.


ஆனால், விபத்தின்போது உடைந்து போன சுரங்க கருவிகள்தான் அவை என தற்போது தெரிந்ததால், மீட்பு படையினர் ஏமாற்றம் அடைந்தனர்.


எனவே, இறுகிக் கிடக்கும் வண்டல் சகதிக்குள், சந்தேகப்படும் இடங்களில் எல்லாம், தரையில் ஊடுருவும் ரேடார் மூலம் சோதனை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்கிடையே, மீட்புப் பணிகளை முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று நேரில் சென்று பார்த்தார். அவர் கூறுகையில், ''சுரங்கத்துக்குள் கி.மீ., தொலைவில் விபத்து நடந்தது. எட்டு பேரும் எங்குள்ளனர் என மிகச் சரியாக தெரியவில்லை.

''ஏனென்றால், 5 மீட்டர் தடிமனில், சகதியும் வண்டல் மண்ணும் நிறைந்துள்ளது. எனவே, அவர்களை கண்டுபிடிக்க மேலும் மூன்று நாட்களாகும். எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லாமல் அரசு சார்பாக அறிவிப்பு வெளியிட முடியாது” என்றார்.

Advertisement