இடதுசாரி இயக்கங்களை பலப்படுத்த மதுரையில் மாநாடு; மார்க்சிஸ்ட் கம்யூ., பாலகிருஷ்ணன் தகவல்

மதுரை : ''நாட்டில் இடதுசாரிகளை பலப்படுத்தி, மதச்சார்பற்ற கோட்பாடுகளை நோக்கி மக்களை ஒன்றுதிரட்டும் விதமாக மதுரையில் அகில இந்திய மாநாடு நடைபெறும்,'' என, மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


மதுரை தமுக்கத்தில் ஏப்., 2 முதல் 6 வரை மார்க்சிஸ்ட் கம்யூ.,வின் 24வது அகில இந்திய மாநாடு நடக்கவுள்ளது. அது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மாநில குழு உறுப்பினர் பத்ரி வரவேற்றார். www.cpim24thcongress.info எனும் மாநாட்டிற்கான இணையதளத்தை மாநில செயலாளர் சண்முகம் துவக்கி வைத்தார்.


மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

இம்மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., இடைக்கால ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

பா.ஜ., அரசின் கார்ப்பரேட் பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அழிந்தும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் நலிந்தும் காணப்படுகின்றன.

பிரதமர் மோடியின் ஆதரவுடன் கார்ப்பரேட் முதலாளிகள் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அத்தகைய கார்ப்பரேட் முதலாளித்தன கொள்கைக்கு எதிராக வியூகம் வகுக்க இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.


பா.ஜ., அரசு புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கை, மாநில உரிமைகளை பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் இடதுசாரிகள் இயக்கத்தை பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், நாட்டை அச்சுறுத்தும் பா.ஜ., ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற கோட்பாட்டை நோக்கி மக்களை ஒன்றுதிரட்டுவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.


குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு எனில் கொந்தளிக்கும் பா.ஜ., அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசு பிரதிநிதியாக உள்ள தமிழக கவர்னர் ரவி தான் மீனவர் நலனில் காட்டும் அலட்சியம் குறித்து பதில் கூற வேண்டும் என்றார்.

வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement