தள்ளாடுதே கோவை! ஏற்கனவே போதைப்பொருட்களால் ஆட்டம்! இப்போது எப்.எல்.2 மதுக்கடையிலும் கூட்டம்

1

கோவை; கோவையில் டாஸ்மாக் சாதாரண மதுக்கடைகளின் எண்ணிக்கைக்கு நிகராக, எப்.எல். 2 என்றழைக்கப்படும் மனம் மகிழ் மன்ற மதுக்கூடங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.ஏற்கனவே, பல்வேறு போதைப்பொருள் வினியோகம், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், சத்தமில்லாமல் எப்.எல்.2 மதுக்கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ், கோவையில் எப்.எல்.1 வகை மதுக்கடைகள் (நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுக் கடைகள்) கோவை வடக்கில், 155, தெற்கில், 129 என்று மொத்தம், 284 கடைகள் உள்ளன.

எப்.எல்.2 என்பது, மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கடைகள். எப்.எல்.3 என்பது ஸ்டார் ஓட்டல்களில் உள்ள மதுக்கடைகள். எப்.எல்.3ஏ என்பது அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள கடைகள். எப்.எல்.3ஏஏ என்பது அதன் கிளைகள்.

எப்.எல்.4 முதல் எப்.எல்.,10 வரை ஏர்போர்ட், ராணுவம் உள்ளிட்ட அரசு சார்ந்த அரசால் இயக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட இடங்களில், மதுபானங்களை விற்பனை செய்ய வழங்கப்படும் அனுமதி.

எப்.எல்.11 வகைக் கடைகளில், வெளிநாட்டு மதுபானங்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படும். இதுவும் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படுவதுதான். இதற்கென்று, நகரில் பல இடங்களில் கடைகள் உள்ளன.

கோவை மாவட்டத்தில், எப்.எல்.2 வகை மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கடைகளின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில மட்டுமே, ஆங்காங்கே இருந்தன.

கடந்த ஆறு மாதங்களில், 10, 20, 30 என்று படிப்படியாக உயர்ந்து தற்போது, 64 கடைகளாக இதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கோவையில் மேலும், 10 கடைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

எப்.எல்.2 வகை கடைகளில், வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். காலை 11:00 மணிக்கு துவங்கி, இரவு 11:00 மணி வரை இயக்கலாம்.

ஆனால்நேரம் காலம் இன்றி,எப்போது வேண்டுமானாலும் மது வாங்கலாம், குடிக்கலாம்.அதே சமயம் வெளிநாட்டு மதுபானங்கள் தவிர, இங்கு சாதாரண மதுபானங்களும் கிடைக்கின்றன.

மனமகிழ் மன்றங்கள், கிளப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே, மது குடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உறுப்பினர் அல்லாத, சாதாரண மக்களும் இங்கு மது வாங்கி குடிக்கின்றனர்.

அதனால் மனமகிழ் மன்றங்கள், டாஸ்மாக் மதுக்கடைகளை போன்றே, கோவையில் சிறப்பாக செயல்படுகின்றன.இதைக்கட்டுப்படுத்த வேண்டும்; எப்.எல்.2 வகை மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கை,கோவை மக்களிடம் வலுத்துள்ளது.

எப்.எல்.3 வகை மதுக்கடைகள்



கோவையில் எப்.எல்.3 வகை மதுக்கடைகள் அதாவது, ஸ்டார் ஓட்டல்களில் மட்டும் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை, 127. இதன் எண்ணிக்கை ஆரம்பத்தில் நுாறாக இருந்தது. ஸ்டார் ஓட்டல்களுக்கு மட்டுமே, இந்த வகை மதுக் கடைக்கான அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஸ்டார் அந்தஸ்து இல்லாத சில ஓட்டல்களுக்கும், எப்.எல்.,3 வகை அனுமதியை வழங்கியதால், தற்போது இதன் எண்ணிக்கை, 127 ஆக உயர்ந்துள்ளது.

மதுவையும், போதைப்பொருளையும் ஒழிப்போம் என்று சொல்லும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு மாற்றாக, சத்தமில்லாமல் எப்.எல்.2 வகை மதுக்கடைகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கடைகளை மூட கலெக்டரிடம் மனு

கோவை மதுக்கரை தாலுகா, க.க.சாவடி, நேதாஜிபுரத்தில், ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி, நான்கு இன்ஜினியரிங்மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகள், ஒரு மருத்துவமனை,தேசிய நெடுஞ்சாலைக்கு 100 மீட்டர் தொலைவில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், எப்.எல்.2, மனமகிழ்மன்ற மதுபானக்கடை, சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதியைசுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடையை மூட வலியுறுத்தி, கலெக்டர் பவன்குமாரிடம் நேற்று மனு கொடுத்தனர்.

Advertisement