எளிமையான வினாக்கள்; இனிமையான துவக்கம்; பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

மதுரை : பிளஸ் 2 தமிழ் தேர்வில் வினாக்கள் மிக எளிமையாக கேட்கப்பட்டதால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தேர்வு அச்சத்தில் இருந்த எங்களுக்கு முதல் தேர்வே உற்சாகத்தை தந்துள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்.
மதுரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:
எளிது... எளிது...
ஹாரூண் ரஷீத், அல் அமீன் மேல்நிலை பள்ளி, மதுரை:
இரண்டு மதிப்பெண், குறுவினா, நெடுவினா, மனப்பாடம் பகுதி, இலக்கணம் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டவை மிக எளிதாக இருந்தன. மூன்று மதிப்பெண் பகுதியில் எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெறவில்லை. சற்று கடினமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் 14 ல் 7 மட்டுமே 'புக்பேக்'கில் உள்ளவை. மற்ற வினாக்கள் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. சாதாரண மாணவர்களும் எளிதாக தேர்ச்சி பெறலாம். இந்தாண்டு பொதுத் தேர்வு, இனிமையான துவக்கமாக இருந்தது.
'புக் பேக்' வினாக்கள் அதிகம்
தாரிணி ஸ்ரீ, சுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக் பள்ளி, மேலுார்:
இரண்டு, நான்கு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் 'புக் பேக்' வினாக்கள் தான். அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் அடிக்கடி எழுதி பயிற்சி பெற்றிருந்தோம். ஆசிரியர்களும் போதிய பயிற்சி அளித்தனர். அனைத்து வினாக்களும் எளிமையாக எழுத முடிந்தது. திருக்குறள், நெடுவினாக்களில் அப்படியே முழு மதிப்பெண்கள் பெற முடியும். துணைப் பாடம் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட 'கோடை மழை', 'உரிமை தாகம்' இரண்டு கதைகளும் அடிக்கடி எழுதிப்பார்த்தவை. எனவே தமிழில் 'சென்டம்' பெறுவது எளிது.
அசத்தல் ஆரம்பம்
தமிழரசி, லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, டி.கல்லுப்பட்டி:
பொதுத் தேர்வு என்பதால் மனதில் சிறிது அச்சம் இருந்தது. ஆனால் வினாத்தாளை பெற்று வாசித்தபோது அனைத்துக்கும் விடை எளிதில் எழுதிவிட முடியும் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அசத்தலான ஆரம்பம். குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் சில வினாக்கள் 'புக்பேக்' இல்லையென்றாலும் விடை தெரிந்தவையாக இருந்தன.
நெடுவினா பகுதியில் செய்யுள், உரைநடை, துணைப் பாடம் பகுதி என சம மதிப்பெண்களில் கேட்கப்பட்டன. மொழிப் பயிற்சி பகுதியிலும் எளிய ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றதால் சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட நன்றாக எழுதியிருப்பார்கள்.
அதிக மதிப்பெண் எளிது
ரேஷ்மா, பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எழுமலை:
ஒரு மதிப்பெண் பகுதியில் ஒருசில வினாக்கள் தவிர்த்து அனைத்தும் எளிமையே. நன்றாக படிக்கும் மாணவர்கள் எளிதில் 'சென்டம்' பெற முடியும். மனப்பாட பகுதியில் முதல் பாடல் கேட்கப்பட்டது. மொழிப்பயிற்சி பகுதியும் மிக எளிது. அதில் இருந்து 12 மதிப்பெண்கள் அப்படியே அள்ள முடியும்.
'பா நயம் பாராட்டு' நெடுவினா, துணைப்பாடம் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் பள்ளி தேர்வுகளில் அடிக்கடி எழுதிப்பார்த்தவை. அதிக மதிப்பெண் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது.
தமிழில் சென்டம் அதிகரிக்கும்
ராஜ்குமார், ஆசிரியர், யு.சி., மேல்நிலைப் பள்ளி, மதுரை:
இந்தாண்டு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மிக இனிமையாக துவங்கியுள்ளது. 95 சதவீதம் வினாக்கள் ஏற்கனவே நடந்த அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டவை. மீதம் 5 சதவீதம் வினாக்களும் எளிமை. மனப்பாடம் பகுதியில் முதல் பாடலான 'தண்டியலங்காரத்தில்' இருந்தே கேட்கப்பட்டுள்ளது.
14 மதிப்பெண்களுக்கான இலக்கணப் பகுதி அனைத்தும் எளிமை. 'சொல்லை பிரித்து சேர்த்து பொருள் தொடர் அமைத்து எழுதும்' பகுதியில் இடம் பெற்ற 'வெங்காயம்', 'அந்தமான்' சொற்கள் அடிக்கடி கேட்கப்பட்டவை. 'பாராகிராப் கொடுத்து வினாக்கள் கேட்கும் பகுதி' அனைத்து மாணவர்களும் எழுதும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டிருந்தது.
'கடிதம் எழுதுதல் பகுதி'யில் அதிகம் எதிர்பார்த்த 'மின்வாரியத்திற்கு கடிதம் எழுதுதல்' கேட்கப்பட்டிருந்தது. பலர் 'சென்டம்' பெறும் வாய்ப்பு உள்ளது.
மேலும்
-
விதிமீறி கருக்கலைப்பு மாத்திரை விற்றால் சிறை தண்டனை
-
குறைகேட்பு கூட்டத்தில் குறைகளை 'குவித்த' மக்கள்; ஆய்வு செய்து தீர்வு காண்பார்களா அதிகாரிகள்
-
கால்நடை சந்தை வரத்து குறைந்தது
-
கொஞ்சம் நெகிழ்ச்சி... கொஞ்சம் அச்சம்... நிறைய மெத்தனம்! ஒன்றாக சேர்ந்தால் போலீசின் ஒரு நாள் நள்ளிரவு வாகன தணிக்கை
-
ஏலச் சீட்டு நடத்தி பெரும் மோசடி: தம்பதி 'ஓட்டம்'
-
'டெக்ஸத்தான் - 3.0'! 18, 19ம் தேதிகளில் தொழில் திருவிழா; 'அடல் இன்குபேஷன்' மையம் ஏற்பாடு