திருப்பரங்குன்றம் மலை ஆய்வுக்கு மத்திய அரசு மனு
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில்,'மலையை 'ட்ரோன் கேமரா' மூலம் ஆய்வு செய்ய அனுமதிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்,' என மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வலியுறுத்தப்பட்டது.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற அனைத்து பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், 'தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
திருப்பரங்குன்றம் ஒசீர்கான், 'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையிடக்கூடாது. சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,' என்று மனு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள்,' திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்று என அறிவிக்க வேண்டும். என்று மனு செய்தார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
மத்திய அரசு தரப்பு: மலையிலுள்ள தொல்லியல் சின்னங்களை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். வண்ணம் தீட்டியுள்ளனர்.
மலையை 'ட்ரோன் கேமரா' மூலம் ஆய்வு செய்ய கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதிக்கவில்லை. அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
சோலைகண்ணன், ராமலிங்கம் வழக்குகளில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனு செய்த மதுரை சரவணன் தரப்பு வழக்கறிஞர்:
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்ய பிற நீதிமன்றங்கள் அனுமதிக்கக்கூடாது என இடைக்கால உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் ஆடு, மாடு, கோழி பலியிடுவதற்கான தடை சட்டத்தை தமிழக அரசு 2003 ல் கொண்டுவந்தது. அதை 2004 ல் திரும்பப் பெற்றது. இவ்வழக்குகள் நிலைக்கத்தக்கதல்ல.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தமிழக அரசு தரப்பு: திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதி முஸ்லிம்களுக்கு சொந்தம். மற்ற பகுதி கோயிலுக்கு சொந்தமானது என ஆங்கிலேயர் ஆட்சியில் லண்டன் 'பிரிவி கவுன்சில்' தீர்ப்பளித்துள்ளது. ஆடு, கோழி பலியிடுவது பாரம்பரியமாக தொடர்கிறது. அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்தது.
மத்திய, மாநில அரசுகள் தரப்பில் மார்ச் 24 ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும்
-
சிலிக்கான் மணல் கடத்திய மூன்று 3 லாரிகள் பறிமுதல்
-
குளங்களில் ஆகாய தாமரை அதிகரிப்பு அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
-
டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு
-
பிளேக் மாரியம்மன் கோவிலில் வரும் 12ல் குண்டம் திருவிழா
-
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
-
சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு போலீசார் சென்னையில் காத்திருப்பு