மண் அள்ளும் இயந்திரத்தை இயக்கிய 'போதை' சிறுவன்; 15க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மதுரை : மதுரை செல்லுாரில் நேற்று அதிகாலை போதையில் மண் அள்ளும் இயந்திரத்தை இயக்கி 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்தியதாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

மதுரை செல்லுார் 50 அடி ரோட்டைச் சேர்ந்த சிறுவன், மண் அள்ளும் இயந்திரத்தின் கிளீனராக உள்ளார்.

பிப்.28 ல் இதன் டிரைவர் வெளியூர் சென்றநிலையில், நேற்று அதிகாலை மண் அள்ளும் இயந்திரத்தை சிறுவன் இயக்கினார். அப்போது ரோட்டோரம் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோக்கள், டூவீலர்கள் மீது அடுத்தடுத்து தெரிந்தே மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் நசுங்கின.

அப்போது இரும்பு கடை ஒன்றில் துாங்கிக்கொண்டிருந்த காவலாளியை நோக்கி மண் அள்ளும் இயந்திரத்தால் அழுத்தப்பட்ட சரக்கு வாகனம் வந்தது. அவர் சுதாரித்து எழுந்து ஓடி உயிர்தப்பினார். அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து சிறுவனை பிடித்து 'கவனித்தனர்'. அப்போது அவர் போதையில் இருந்தது தெரிந்தது. சிறுவனை செல்லுார் போலீசார் கைது செய்தனர். சேதப்படுத்திய ஆட்டோக்களால் தங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக டிரைவர்கள் புலம்பி வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ''செல்லுார் பகுதியில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி தாராளமாக கஞ்சா, மது கிடைக்கிறது. சிறுவர்கள் பலர் அதற்கு அடிமையாகிவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் இச்சம்பவம். போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்'' என்றனர்.

Advertisement