ஹொய்சாளா கலையின் பிரதிபலிப்பு 'அம்ருதேஸ்வரா கோவில்'

கர்நாடகாவின் சிக்கமகளூரு, அம்ருதாபுராவில் உள்ளது, அம்ருதேஸ்வரா கோவில். இது ஒரு சிவன் கோவிலாகும். மூலவராக அம்ருதேஸ்வராவும், அம்மன் சன்னிதியில் சாரதா தேவியும் அருள்பாலிக்கின்றனர். இது தவிர ஏராளமான ஹிந்து கடவுள்களின் விக்ரஹங்களும் உள்ளன.

கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் ஹொய்சாளா கட்டடக்கலை பிரதிபலிக்கிறது. இந்த கோவில் போலவே, அச்சு அசலாக பெலவாடியில் உள்ள வீர நாராயணா கோவிலும் காட்சி அளிக்கிறது.

இந்த கோவில், கி.பி., 1196 ம் ஆண்டில், ஹொய்சாளா மன்னர் வீரா பல்லாலா ஆட்சியில் கட்டப்பட்டது.

பரந்து விரிந்த மண்டபம்



கோவிலில் உள்ள துாண்கள், பெரிய அளவிலான பரந்து விரிந்த மண்டபத்தை தாங்கி பிடிக்கின்றன. ஹொய்சாளா கட்டட கலையில் கட்டப்பட்ட மற்ற கோவில்களை விட, இக்கோவில் பெரிய அளவில் உள்ளது. ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களின் குறிப்புகள் நிறைய இடங்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் 'ஓம்' என்று எழுதும் நடைமுறை, இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.வேண்டுதல்கள் நிறைவேறினால், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் சேலையை காணிக்கையாக வழங்கும் நடைமுறை உள்ளது. இக்கோவிலில் குங்குமம், வில்வ அர்ச்சனை பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், 200 ஆண்டுகளாக 'அணையா விளக்கு' எரிந்து கொண்டுள்ளது.

ஆடை கட்டுப்பாடு



கோவிலினுள் நுழைவதற்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்கள் வேட்டி, பேன்ட், சட்டையும்; பெண்கள் சேலையும், ரவிக்கையும் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 'துாண்களை தொட வேண்டாம்' எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவிலுக்கு செல்வதற்கு அக்டோபர் முதல் பிப்ரவரி வரை சிறந்த மாதங்களாக கருதப்படுகிறது. பிரம்மாண்டமாகவும், பழமை மாறாமலும் காட்சி தரும் இக்கோவிலை பார்ப்பதற்கு பலரும் வருகை தருகின்றனர்.


இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலுக்கு சென்று ஐயன் அருள் பெறலாமா
- நமது நிருபர் -
.

Advertisement