உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

2

தினமலர் நாளிதழ் நடத்திய, 'வாகை சூடு' நிகழ்ச்சியில், கோவை மாநகர போலீஸ் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் பேசியதாவது: தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குற்றம் என்பது சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்வது. மனிதன் தோன்றிய காலம் முதல் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. தற்போது டிஜிட்டல் துறை ஆயுதமாக உள்ளது.


Latest Tamil News

உங்களுடைய அனைத்து தகவல்களையும் திருட முடியும். சமூக வலைதளங்களில், எதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது முக்கியம். தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்கிறது. ஆனால், அதற்கேற்றார் போல் நாம் இன்னும் வளரவில்லை.



அந்த தொழில்நுட்பம் எப்படி, நம் தகவலை திருடுகிறது என்பது குறித்து அறிந்திருப்பதில்லை. குறிப்பாக பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது இ-மெயில் உள்ளிட்ட அனைத்துக்குமான கடவுச்சொல் எப்படி இருக்க வேண்டும் என, வரையறை உள்ளது.
ஆனால், நாம் அதை பின்பற்றுவதில்லை.



நமது பிரத்யேக தகவல்களை யார் பார்க்க வேண்டும் என்பதை, நாம் தான் முடிவு செய்ய வேண்டும். தொழில்நுட்பம் கெட்ட விசயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்று அதிகளவில் முதியவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். சைபர் கிரைம் குறித்து, நமது தெரிந்த விசயங்களை முதியவர்களுக்கு சொல்ல வேண்டும். பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம்கள் அதிகம் நடக்கின்றன.


சொல்லப்பட்ட குற்றங்களை விட, சொல்லப்படாத குற்றங்களே அதிகம். பயம் கூடாது. நமது தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும், பகிரக்கூடாது. அனைத்தையும் பாதுகாப்புடன் கையாள வேண்டும். நம்பிக்கையில்லாத இணையத்தளத்தில், நம் தகவல்களை பகிரக்கூடாது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகள், தகவல்களை நம்பி, அவற்றை பின்தொடரக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
Latest Tamil News



கல்வி வழங்க வேண்டும்

'வாகை சூடு' நிகழ்ச்சியில், மாணவியர் மத்தியில், அவினாசிலிங்கம் பல்கலை ஹோம் சயின்ஸ் டீன் அம்சாமணி பேசியதாவது:பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெண்கள் வெற்றி பெற அவர்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமான கல்வியாக இருக்க கூடாது.


ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை பயன்படுத்தி உயர வேண்டும். பெண்கள் சமையலறையில் முடக்கப்பட்ட நிலை மாறி, இன்று அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். உங்களுக்குள் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த திறன் உங்களிடம் உள்ளதோ, அதை வெளிப்படுத்தி, வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement