தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்

1


சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் சங்களா, 42. இவரும், இவரது மகன் ரோகித் சங்களாவும், 19, சென்னை, ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவில் தங்கி, இனிப்பு பலகாரம் செய்யும் வேலை செய்து வந்தனர்.

சில நாள்களுக்கு முன், ரோகித் சங்களா வாங்கிய சம்பள பணம், 17,000 ரூபாயை தந்தையிடம் கொடுத்துவிட்டு, தன் செலவிற்கு பணம் கேட்டார்.ஜெகதீஷ் சங்களா பணம் கொடுக்காமல், மகனை திட்டினார். 'வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், பொறுப்பின்றி இருக்கிறாய்' எனக்கூறி, அடிக்கடி கண்டித்ததால், தந்தை மீது ரோகித் சங்களா கோபத்தில் இருந்தார்.



இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெகதீஷ் சங்களா வீட்டில் துாங்கினார். அப்போது, அங்கு வந்த ரோகித் சங்களா, இரும்பு கம்பியால் தந்தை ஜெகதீஷ் சங்களாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் சங்களா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பின், ரோகித் சங்களா, தன் தந்தையை கொலை செய்ததை, கொண்டித்தோப்பில் வசிக்கும் உறவினர் மன்கனி ராமிடம், மொபைல் போனில் தெரிவித்தார். இதை நம்பாத மன்கனி ராம், பொய் எல்லாம் சொல்லாதே என, ரோகித் சங்களாவிடம் தெரிவித்தார்.


இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை வீடியோவாக எடுத்து, மன்கனி ராமிற்கு வாட்ஸாப் வாயிலாக அனுப்பினார். மேலும், விமான நிலையம் போய், அங்கிருந்து ராஜஸ்தான் வருகிறேன், என மாமாவிடம் கூறியுள்ளார்.



வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மன்கனி ராம், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ஜெகதீஷ் சங்களா உயிரிழந்தது தெரியவந்தது. உடனே, ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், ஜெகதீஷ் சங்களா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும், சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த ரோகித் சங்களாவை, போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த இரும்பு கம்பியை பறிமுதல் செய்தனர். கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement