அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

சித்தையன்கோட்டை: ''தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.''' என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

சித்தையன்கோட்டை பேரூராட்சி புதுப்பட்டி காலனியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கிராம அறிவுசார் மைய கட்டடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மக்களுக்கான தேவைகள் அனைத்தும், வசிக்கும் பகுதியின் அருகாமையில் கிடைக்கிறது.

50 பேர் வசிக்கும் பகுதியில் கூட ஒரு பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும், சோசலிஷத்தையும் முதல்வர் நிறைவேற்றினார். சாதி, மத பேதமற்ற சூழலில், எல்லோரும் உறவினர்கள் என்ற மனப்பான்மையுடன் இன்றைய தமிழகம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் போதும்பொண்ணு, செயல் அலுவலர் ஜெயமாலு, துணைத் தலைவர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர்.

Advertisement