கொழுமம் ரோட்டில் அதிகரிக்கும் விபத்துகள்; டிவைடர் வைக்க வலியுறுத்தல்

உடுமலை; உடுமலை - கொழுமம் ரோட்டில், அதிவேகமாக பறக்கும் வாகனங்களால் விபத்துகளும் அதிகரிக்கிறது.

உடுமலை - கொழுமம் ரோட்டில், தினமும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் வாகனங்கள் ரோட்டில் தாறுமாறாக செல்வதால், விபத்துகளும் தொடர்ந்து நடக்கிறது.

இந்த ரோட்டில் ரயில்வே கேட் வரை மட்டுமே, வாகனங்கள் கட்டுபாட்டுடன் செல்கின்றன. அதன் பின், இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், மினி வேன்கள் என அனைத்துமே வேகத்தில் பறக்கின்றன.

ரயில்வே கேட் பகுதியிலிருந்து, எஸ்.வி., புரம் வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப் வரை குடியிருப்புகள் அதிகம் உள்ளன.

உடுமலை - பழநி ரோட்டிலுள்ள பள்ளிகளின் மாணவர்களும், கொழுமம் ரோட்டிலுள்ள பஸ் ஸ்டாப்களை பயன்படுத்துகின்றனர். மேலும், அப்பகுதியில் பள்ளி குழந்தைகளும் அதிகம் உள்ளனர்.

இவ்வாறு குடியிருப்புகள் அதிகமிருந்தும், அவ்வழியாக செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் வேகத்தை கட்டுபடுத்தாமல் செல்கின்றனர். குடியிருப்புகளிலிருந்து பிரதான ரோட்டுக்கு வரும் வாகனங்களையும் கவனிப்பதில்லை. இதனால் விபத்துகள் அதிகம் நடக்கிறது.

அப்பகுதியினர் கூறியதாவது:

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, குடியிருப்பு பகுதியிலிருந்து கொழுமம் ரோட்டில் நடைபயிற்சிக்கு வந்த முதியவர், இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி இறந்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக மாலை நேரங்களில் அதிகம் நடக்கிறது. பள்ளி மாணவர்கள் அதிகளவில் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.

போக்குவரத்து போலீசார் விபத்து தடுப்பு நடவடிக்கையாக வேகத்தடைகள் அமைப்பதற்கும், டிவைடர்கள் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement