அரசு மருத்துவமனை கட்டடம் அகற்றம்: மானாமதுரைக்கு புதிய கட்டடம் வருமா

மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினம்தோறும் 600க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த 6 மாதமாக பெரும்பாலான டாக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது.

குறிப்பாக மகப்பேறு மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் கர்ப்பிணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இம்மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும்மேலாகிவிட்டதால் கட்டடங்கள் ஆங்காங்கே சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலை இருந்து வருகிறது.

இக்கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டடங்கள் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள்,நோயாளிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இம்மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி 15வது நிதிக்குழு ஆணைய சுகாதார திட்டத்தின் கீழ் 3.50 கோடி செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்காக கடந்த வாரம் பூமி பூஜை நடைபெற்றது.

மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள், நோயாளிகள் கூறியதாவது:

இம்மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் தான் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை ஏற்றி வந்து மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் இறக்கி விடுகின்றனர். மேலும் இப்பகுதியில் தான் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு வருகின்றன.

விபத்து மற்றும் தற்கொலை போன்றவற்றில் இறந்து போனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை அறையில் உடற்கூறாய்வு செய்யும் வரை அவரது உறவினர்கள் மேற்கண்ட இடத்தில் தான் அமர்ந்து இருப்பர்.

மேலும் அவர்கள் வரும் வாகனங்களும் இப்பகுதியில் தான் நிறுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் நிழல் தரக்கூடிய மரங்களும் உள்ளன. மேற்கண்ட இடத்தில் புதிய கட்டடம் கட்டினால் ஆம்புலன்ஸ் நிறுத்த, உறவினர்கள் அமர சிரமம் ஏற்படும்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடு செய்வதோடு, பழமையான இடத்தை அகற்றி முழுவதும் புதிய மருத்துவமனை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement