ஜி.எச்., ரோட்டில் சிக்னல் இல்லா பயணத்தால் சிக்கல்

கோவை; அரசு மருத்துவமனை ரோட்டில், சிக்னல் இல்லா பயணத்தால், வாகனங்கள் தினமும் உரசி, விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை அமைந்துள்ள திருச்சி ரோட்டில், வாலாங்குளம் ரோடு, ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண, அரசு மருத்துவமனை ரோட்டில் சிக்னல் மூடப்பட்டது.

இருபுறத்திலும், சிக்னலுக்கு சில மீட்டர் துாரத்தில், சென்டர் மீடியன் அகற்றப்பட்டு வாகனங்கள் திரும்பி செல்லும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சுங்கம் மற்றும் வாலாங்குளம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், அரசு கலைக்கல்லுாரி ரோட்டிற்கு செல்வதற்கு, அரசு மருத்துவமனை ஓட்டிய பஸ் ஸ்டாப்பில், 'யு டேர்ன்' போட்டு திரும்ப வேண்டும்.

அவ்வாறு திரும்பும் போது, டவுன்ஹால் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலிருந்து வரும் வாகனங்களுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. திரும்பும் பகுதியில் பேருந்து நிறுத்தம் இருப்பதால், வரிசையாக பஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அரசு கலை கல்லூரியில் இருந்து, வாலாங்குளம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள், தனியார் பள்ளி எதிரே 'யு டேர்ன்' போடும் போது, பின்னால் வரும் வாகனங்கள் இடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அப்பகுதியில், எந்நேரமும் போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் சிக்னல் செயல்பட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement