தி.மு.க.,பேனர் வைக்கும் பணியில் துாய்மை பணியாளர்களுக்கு வேலை; கலெக்டரிடம் பா.ஜ., புகார்

தொண்டாமுத்தூர்; கலிக்கநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., பேனர் வைக்கும் பணியில், பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்ட விவகாரத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, பா.ஜ.,வினர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட கலிக்கநாயக்கன்பாளையத்தில், கடந்த 28ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க., சார்பில், பேனர் அடிக்கப்பட்டது. அந்த பேனர்களை வைக்கும் பணியில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி வாகனம் பயன்படுத்தப்பட்டது.

இவ்விவகாரத்தில், பேரூராட்சி பணியாளர்களை, 4 நாட்கள் சஸ்பெண்ட் செய்து, செயல் அலுவலர் சீனிவாசன் உத்தரவிட்டார். இந்நிலையில், இவ்விவகாரத்தில், பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கட்சி பேனர் வைக்க தூய்மை பணியாளர்களை பயன்படுத்தியுள்ளனர்.

இதில், தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள், செயல் அலுவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisement