தனியார் மருத்துவமனை பெயரில் நிதி மோசடி ஏமாற்றப்பட்டவர்கள்  புகார் தெரிவிக்கலாம் 

ராமநாதபுரம்: -மதுரையில் சாந்தி மல்டி ஸ்பெஷாட்டி மருத்துவமனை பெயரில் நிதி முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஏமாற்றப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளதாவது: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மோகன் மனைவி பானுமதியிடம், அதே பகுதியைச் சேர்ந்த தும்முசின்னம்பட்டியை சேர்ந்த டாக்டர் பூரணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபால கிருஷ்ணன் ஆகியோர் மதுரை சிந்தாமணியில் சாந்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டி வருவதாகவும். அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36 சதவீதம் முதல் வட்டி தருவதாகவும், முதலீட்டாளர்களின் குடும்பத்திற்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும்.

முதலீட்டாளர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மருத்துவ செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும், என ஆசை வார்த்தைகள் கூறி நம்பவைத்து மேற்படி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் நம்பிக்கை மோசடி செய்ததால் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் வாதி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

எனவே சாந்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணத்தை முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காதவர்கள் யாரும் இருந்தால் தங்கள் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, க.எண்.4/425 A, சங்கரபாண்டியன் நகர், தபால் தந்தி நகர் விரிவாக்கம், மதுரை என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement