காந்தம் போல் இழுக்கும் கரிகட்டா மலை

கர்நாடகா சுற்றுலா பயணியரின் சொர்க்கம். இங்கு புண்ணிய தலங்களும் ஏராளம். பக்தி மணம் கமழும், பல மலைகள் இங்குள்ளன. பக்தர்களை காந்தம் போன்று சுண்டி இழுக்கிறது. கரிகட்டா மலையையும் இந்த பட்டியலில் சேரும்.

மாண்டியா மாவட்டத்தில் கரும்பு அதிகம் விளைவதால், 'சர்க்கரை மாவட்டம்' என, அழைக்கப்படுகிறது. வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கப்பட்டணாவின் ஸ்ரீரங்கநாதர், மேலு கோட்டேவின் செலுவராய சுவாமி கோவில்கள் இங்குள்ளன. புராண பிரசித்தி பெற்ற கரிகட்டா மலையும் அமைந்துள்ளது.

மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவில் கரிகட்டா மலை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த மலையில் பிருகு ரிஷி தவம் புரிந்தாராம். பெயருக்கு தகுந்தபடி கறுப்பாக தென்படுகிறது. மலை கறுப்பாக இருந்தால், ஊருக்கு நல்லது என, நினைத்து மலையில் வளர்ந்து நின்றுள்ள மரங்கள், செடி, கொடிகளுக்கு, மக்கள் தீ வைக்கின்றனர். பல ஆண்டுகளாக இது போன்று தீ வைப்பதால், மலையே கறுப்பாக தென்படுகிறது.

ஸ்ரீரங்கபட்டணாவில் இருந்து கூப்பிடும் துாரத்தில் உள்ள கரிகட்டா மலைக்கு, தன்னுடையதே ஆன வரலாறு உள்ளது. ஸ்ரீமன் நாராயணர் பூலோகத்தில் அவதரிக்க வேண்டி, பிருகு ரிஷி இதே இடத்தில் தவம் செய்ததாக, புராணங்கள் கூறுகின்றன. இங்கு நாராயணர், வெங்கட ரமணராக நிலை நின்றார். இம்மலை 'கர்நாடகாவின் திருப்பதி' என்றே பிரசித்தி பெற்றது.

ஆண்டு தோறும் பிப்ரவரியில், மலையில் பிரம்ம ரத உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு பிப்ரவரி 15ம் தேதி பிரம்ம ரத உற்சவம் நடந்தது.

இதில் கர்நாடகாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருகை தந்தனர். தங்களின் கஷ்டங்கள் நீங்கி, நன்மை நடக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்தனர்.

இங்கு குடிகொண்டுள்ள வெங்கட ரமணரை தரிசனம் செய்தால், நினைத்தது நடக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம் வேண்டி, பிள்ளை வரம் வேண்டி பலரும் வருகின்றனர். ஒரு முறை வந்தால் மீண்டும், மீண்டும் வர துாண்டும் அற்புதமான மலையாகும். மாண்டியாவுக்கு வருவோர், கரிகட்டா மலைக்கு செல்ல மறப்பது இல்லை.




- நமது நிருபர் -

Advertisement