நான்கு வழிச்சாலை பணிகளால் தொடரும் விபத்துக்கள்

காரியாபட்டி: மதுரை -துாத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அறிவிப்பு பலகை, தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவர இல்லாததால் விபத்துக்கள் தொடர்கிறது. கடந்த ஒரு மாதத்தில் நடந்த 20 விபத்துக்களில் 5 பேர் பலியாகிய பரிதாபம் நடந்துள்ளது.

மதுரை-துாத்துக்குடி நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின. தனியார் நிறுவனம் நிர்வகித்து வந்தது. சரிவர பராமரிக்காததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அடிப்படை வசதிகள், தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடு, சென்டர் மீடியனில் முக்கிய இடங்களில் அரளிச்செடிகள், பிரிவு ரோடுகளில் சிக்னல்கள், உயர்கோபுர மின் விளக்குகள் சரிவர இல்லை. பெரும்பாலான இடங்களில் இருந்தும் சரிவர பயன்பாட்டில் இல்லை. இதையடுத்து தனியார் நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியது. இருந்தாலும், நீண்ட நாட்களாக ரோடு சீரமைக்காமல் படு மோசமாக இருந்தது. வாகனங்கள் சென்று வர முடியவில்லை.

சுங்க வரி வசூலிப்பதில் குறியாக இருந்தனர். கட்டணம் வசூலிக்க கூடாது என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். இதையடுத்து மற்ற இடங்களில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட போதும், மதுரை -துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பழைய தார் ரோடுகள் பெயர்த்து எடுக்கப்பட்டு, புதிய தார் ரோடு போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.128 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரோடு சீரமைக்கும் பணிகள் துவங்கின. சீரமைக்கும் இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரிவதில்லை.

குறிப்பாக பிரிவு ரோடுகளில் அறிவிப்பு பலகையோ, பெரிய அளவில் தடுப்போ கிடையாது. பெயரளவில் வைக்கப்பட்டுள்ளதால் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள், கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.

பிரிவு ரோடு, ஒருவழிப்பாதை என வாகனங்கள் சென்று வரும் நிலையில் சென்ற ஒரு மாதத்திற்குள் 20 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த மற்றும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தொடரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

விபத்தை தடுக்க, பணிகள் நடைபெறும் இடங்களில், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் தடுப்பு ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement