அருப்புக்கோட்டையில் 90 ஆசிரியர்களுக்கு சம்பளம் வரலை இளநிலை உதவியாளர் மெத்தனத்தால் தாமதம் என புகார்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டார, துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 90 ஆசிரியர்களுக்கு பிப்., 28ல் வர வேண்டிய சம்பளம் தற்போது வரை வரவில்லை.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் இளநிலை உதவியாளரின் மெத்தனத்தால் சம்பளம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாரிடம் புகார் அளித்தனர்.

அருப்புக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலகம் 1ல் பணிபுரியும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 90 பேருக்கு பிப்., சம்பளம் 28ல் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நேற்று வரை சம்பளம் வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இளநிலை உதவியாளர் மெத்தனத்தால் தான் சம்பளம் பெறுவது தாமதமாவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சி.இ.ஓ., மதன்குமாரிடம் புகார் அளித்தனர்.

கூட்டணியின் வட்டார செயலாளர் மகாராஜன் கூறியதாவது: இளநிலை உதவியாளர் பில் போட தாமதம் செய்கிறார். இதனால் சம்பளம் வரவில்லை. வட்டார கல்வி அலுவலர், டி.இ.ஓ., சி.இ.ஓ.,விடம் புகார் அளித்து விட்டோம். பலனில்லை. இதற்கு முன் பல்வேறு தவறுகளுடன் சம்பள பில் அனுப்பியிருந்தாலும், கல்வி அதிகாரி அதை சரி செய்து சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வார். மாவட்டத்தில் பிற பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வந்துள்ள நிலையில் 90 பேருக்கு மட்டும் வராமல் திண்டாடுகின்றனர் என்றார்.

முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கூறியதாவது: வரி பிடித்தத்தில் ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால் தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு தவறாக இருந்தாலும் மற்றவர்களுக்கும் சம்பளம் ஏற்ற வாய்ப்பில்லை. இது குறித்து விசாரிக்கிறோம். இளநிலை உதவியாளரிடம் விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளேன். வட்டாரக்கல்வி அலுவலரிடம் இதை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளேன். தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement