கோவை - சேலம் பாசஞ்சர் இயக்கம் நிறுத்தம்; 3 ஆண்டாக 4 மாவட்ட பயணிகளுக்கு வருத்தம் 

திருப்பூர்; கடந்த, 2022, மார்ச் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் மீண்டும் ரயில் இயக்கம் துவங்காததால், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய நான்கு மாவட்ட பயணிகள் சிரமம் தொடர்கிறது.

சேலத்தில் இருந்து கோவைக்கு பாசஞ்சர் ரயில் (எண்: 06802) இயக்கப்பட்டு வந்தது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக இயங்கி வந்த இந்த ரயில், நான்கு மாவட்டத்தின் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் நின்று செல்லும் ஒரே ரயிலாக இருந்தது.

கொரோனா காலகட்டத்தில் இயக்கம் நிறுத்தப்பட்ட இந்த ரயில், 2022 பிப்., மாதம் மீண்டும் இயக்கப்பட்டது.

வந்த ஒரு வாரத்தில் பராமரிப்பு பணியை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்த பின், தற்போது வரை மீண்டும் ரயில் இயக்கம் துவங்கவில்லை.

இது குறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது:

சேலத்தில் துவங்கி கோவை செல்லும் வழியில் பல பகுதிகளில் இந்த ரயில் நின்று செல்வதால், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை என நான்கு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.

பராமரிப்பு பணி எனக்கூறி நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில், ரயில் தண்டவாள மேம்பாட்டு பணி எனக்கூறி ஓராண்டு நிறுத்தப்பட்டது. 2022 பிப்ரவரியில் நிறுத்தப்பட்டு, தற்போது, மூன்று ஆண்டு முழுமையாக நிறைவு பெற்று விட்டது.

ஆனால், நிறுத்தப்பட்ட சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் இயக்கத்தை இன்னமும் துவங்கவில்லை.

நான்கு மாவட்ட பயணிகள் தினசரி பஸ்களில் சிரமத்துடன் சென்று திரும்புகின்றனர். ரயில் இயக்கினால், தினசரி, 5 ஆயிரம் பேர் வரை பயன்பெறுவர்.

தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் ஆலோசித்து மார்ச் இறுதிக்குள் முடிவெடுத்து, 2025 ஏப்ரல் முதல் பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement