அய்யா வைகுண்டர் 193வது அவதார தினவிழா பேரணி: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாகர்கோவில்; அய்யா வைகுண்டரின் 193- வது அவதார தின விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்புக்கு நடந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் அமைந்துள்ளது. அவரது 193வது அவதார தினத்தை ஒட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சுவாமி தோப்புக்கு பேரணி புறப்பட்டது. இதற்காக அய்யா வைகுண்டர் ஞானம் பெற்ற திருச்செந்துார் கடற்கரையில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் புறப்பட்ட வாகன பேரணிகள் நேற்று முன்தினம் இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.

அங்கு நடந்த மாசி மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 5:10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து பேரணி புறப்பட்டது. இதற்கு பால பிரஜாதிபதி அடிகள் தலைமை வகித்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய ஐயாவின் வாகனம் முன் சென்றது. தொடர்ந்து காவி உடை அணிந்த பக்தர்கள் கையில் காவிக்கொடி ஏந்தி ஐயா... சிவ சிவ... அரகர அரகரா... என்று பக்தி கோஷமிட்டு சென்றனர். சந்தனக்கூடம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோலாட்டம் நடந்தது.

திருநெல்வேலி காங்., எம்.பி., ராபர்ட் புரூஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோட்டார் சந்திப்பில் வந்த பேரணிக்கு சவேரியார் கிறிஸ்துவ சர்ச் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரை குளம் வழியாக முத்திரி கிணற்றின் கரையை சுற்றி வந்த ஊர்வலம், மதியம் தலைமை பதியை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

சுவாமிதோப்பு நேற்று பக்தர்களால் நிறைந்திருந்தது. முத்திரி கிணற்றில் குளித்து, பக்தர்கள் குடும்பத்தினருடன் அய்யா வைகுண்டரை வழிபட்டனர். பக்தர்கள் வெற்றிலை பாக்கு பழம் பூ ஆகியவற்றை அய்யாவுக்கு சமர்ப்பித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது.

Advertisement