ஈஷா யோகா மையத்தில் களைகட்டுது 'தமிழ் தெம்பு; தமிழ் மண்' திருவிழா
தொண்டாமுத்தூர்:கோவை ஈஷா யோகா மையத்தில், நடந்து வரும் 'தமிழ் தெம்; தமிழ் மண்' திருவிழாவில், வரும் 7ம் தேதி முதல் மாட்டு சந்தையும், 9ம் தேதி ரேக்ளா பந்தயமும் நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ் தெம்பு திருவிழா குழு தன்னார்வலர் வள்ளுவன், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சத்குருவின் வழிகாட்டுதலில், தமிழ் மண்ணின் கலாசாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையை கொண்டாடும் வகையில், 'தமிழ் தெம்பு; தமிழ் மண்' திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, தமிழ் தெம்பு திருவிழா, கடந்த பிப்.,27ம் தேதி துவங்கியது. வரும் 9ம் தேதி வரை ஆதியோகி முன் நடக்கிறது. வரும், 7 முதல் 9ம் தேதி வரை, நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை நடக்க உள்ளது.
நாள்தோறும் மாலையில், தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், தமிழகத்திற்கு என தனிச்சிறப்பு பெற்ற, 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. இந்த கலைகளின் எளிய செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தமிழரின் பண்பாடு குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிலம்பம், கட்டுரை, கவிதை, ஓவியம், கோலப்போட்டி, பறை இசைப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
16 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என, இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. கொங்கு நாட்டின் வீர விளையாட்டான ரேக்ளா பந்தயம் வரும், 9ம் தேதி நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.